/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மத்திய அரசு திட்டத்துக்கு போட்டி பூஜை தி.மு.க., - அ.தி.மு.க., மோதலால் பரபரப்பு
/
மத்திய அரசு திட்டத்துக்கு போட்டி பூஜை தி.மு.க., - அ.தி.மு.க., மோதலால் பரபரப்பு
மத்திய அரசு திட்டத்துக்கு போட்டி பூஜை தி.மு.க., - அ.தி.மு.க., மோதலால் பரபரப்பு
மத்திய அரசு திட்டத்துக்கு போட்டி பூஜை தி.மு.க., - அ.தி.மு.க., மோதலால் பரபரப்பு
ADDED : செப் 12, 2024 12:22 AM

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி, கும்பளம் பஞ்., பகுதியில், பிரதம மந்திரி கிராம வளர்ச்சி திட்டத்தில், 6.63 கி.மீ.,க்கு, 5.36 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மற்றும் சில திட்டங்கள் என, 7.65 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் துவக்க விழா நேற்று நடந்தது.
வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., துணை பொது செயலருமான முனுசாமி, பணிகளை பூஜை செய்து துவக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை அதே பகுதியில், தி.மு.க., கொடிகளை கட்டினர் அக்கட்சியினர்.
காலை, 7:00 மணிக்கே, தி.மு.க.,வை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், சூளகிரி வடக்கு ஒன்றிய செயலர் நாகேஷ், இளைஞரணி மாநில துணை செயலர் பார்த்தகோட்டா சீனிவாசன் ஆகியோரை வைத்து, பூஜையை நடத்தினர்.
இதை அறியாமல், நேற்று காலை, 8:30 மணிக்கு திட்டப்பணிகளை துவக்கி வைக்க முனுசாமி எம்.எல்.ஏ., வந்தார். அப்போது, 'தி.மு.க., ஆட்சியில் நடக்கும் திட்டங்களை துவக்கி வைக்க, தி.மு.க.,வினரே வர வேண்டும். முனுசாமி எதற்காக வருகிறார்' எனக்கூறி, தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முனுசாமி எம்.எல்.ஏ., ''இது என் தொகுதி, நான் திட்ட பணிகளை துவக்கக்கூடாதா,'' என கேட்டபோது, 'நடப்பது, தி.மு.க., ஆட்சி. திட்டங்களை, தி.மு.க.,வினர் தான் துவக்கி வைக்க வேண்டும்' எனக்கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதை கண்டித்து ராமன்தொட்டி கேட் அருகே, வேப்பனஹள்ளி- - பேரிகை சாலையில், மறியல் போராட்டத்தில் முனுசாமி ஈடுபட்டார். போலீசார் அவரிடம் சமரச பேச்சு நடத்தினர். இதையடுத்து மதியம், 1:30 மணிக்கு மறியலை கைவிட்ட முனுசாமி தரப்பினர், அதே இடத்தில் திட்ட பணிகளுக்கான பூஜையை செய்தனர்.