/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி சம்பவம் தமிழக அரசு சாட்டை
/
கிருஷ்ணகிரி சம்பவம் தமிழக அரசு சாட்டை
ADDED : ஆக 21, 2024 01:30 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த கந்திக்குப்பத்தில், பள்ளி மாணவி பலாத்கார சம்பவம் எதிரொலியாக, பயிற்சி முகாம்கள் நடத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மெட்ரிக், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் சுயநிதி பள்ளிகளில், என்.எஸ்.எஸ்., -- என்.சி.சி., ஸ்கவுட் போன்ற அமைப்புகளை நடத்துகின்றன. அதன் செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்த, மாநில அமைப்பிடம் முறையாக பதிவு செய்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பள்ளியில் இருத்தல் வேண்டும். மாநில அமைப்பு மூலம், முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல், எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது. மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள், மாணவியருக்கு பெண் ஆசிரியைகள் மூலமாக பயிற்சி வழங்க வேண்டும்.
முகாம்கள் நடத்தும்போது, மாவட்ட கல்வி அலுவலருக்கு (தனியார் பள்ளிகள்) அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதி இல்லாமல் எந்த முகாமும், பயிற்சியும் நடத்த ஏற்பாடு செய்யக்கூடாது.
அதே போல, மாணவ, மாணவியர், பெற்றோர் அனுமதியும் எழுத்துப் பூர்வமாக பெறவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.