ADDED : மே 02, 2024 11:19 AM
ஓசூர்: ஓசூரிலுள்ள தேன்கனிக்கோட்டை சாலையில், நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், தொழிலாளர் தினத்தையொட்டி, தொ.மு.ச., சார்பில் நேற்று கொடியேற்று விழா நடந்தது. தொ.மு.ச., மாவட்ட அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தொ.மு.ச., தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து, தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, மாநகர தி.மு.க., அவைத்தலைவர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கம் சார்பில், ஓசூர் அசோக் லேலண்ட், சிப்காட் வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம், ஹைடெக் இன்டஸ்ட்ரீஸ் தொழிற்சங்கம், அரசு போக்குவரத்து கழகம் ஆகிய இடங்களில், தொழிலாளர் தினத்தையொட்டி கொடியேற்று விழா நடந்தது. அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
* ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமை துாக்கும் தொழிலாளர்களுடன் தொழிலாளர்கள் தின விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு புத்தாடைகள், இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டது. சுமை துாக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் படிப்பிற்காக தங்களால் இயன்ற உதவியை வழங்குவதாக விழாவில் கலந்து கொண்டோர் கூறினர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி தொழிலாளர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

