ADDED : ஆக 30, 2024 01:46 AM
ஓசூர், ஆக. 30-
ஓசூர், ஆந்திரா சமிதியில், பிரம்மா சரஸ்வதி மனநல அறக்கட்டளை சார்பில், 'கலிங்கம்' என்ற பாரம்பரிய சித்த மருத்துவ முகாம் நேற்று நடந்தது. 'கலிங்கம்' என்பது சித்த மருத்துவத்தில் கண்ணில் மருந்திட்டு நோய் போக்கும் முறை. சித்தர்களால் கண்டறிந்து வந்த சில அரிய மூலிகை சாற்றில், இளநீரும், மிளகும் கலந்து கண்ணில் விடுவதன் மூலம் நேரடியாக பாய்ந்து உடலில் ஏற்படும் நோயை போக்கும் முறையாகும் என எடுத்துரைத்தனர். மேலும், தலைவலி, கண்களில் புரை, கிட்டப்பார்வை, துாரப்பார்வை, விஷக்கடி, தேமல், வெண்பட்டை, கரும்பட்டை மற்றும் அனைத்து விதமான தோல் நோய்களுக்கும், தொடர்ந்து மருந்திட்டு வருவதால், பல நோய்கள் குணமாகும் என்றும் விளக்கம் அளித்தனர்.
முகாமில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் கண்களுக்கு, மூலிகை சொட்டு மருந்து ஊற்றிக் கொண்டனர். இதில், அறக்கட்டளை நிர்வாகிகள் பிரபாகரன், சசிகலா பிரபாகரன், இணை செயலாளர் சின்னப்பா உள்பட பலர் பங்கேற்றனர்.

