/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தலில் தோல்விக்கு உள்ளடி வேலை பா.ஜ., நிர்வாகிகள் 'வாட்ஸாப்' மோதல்
/
தேர்தலில் தோல்விக்கு உள்ளடி வேலை பா.ஜ., நிர்வாகிகள் 'வாட்ஸாப்' மோதல்
தேர்தலில் தோல்விக்கு உள்ளடி வேலை பா.ஜ., நிர்வாகிகள் 'வாட்ஸாப்' மோதல்
தேர்தலில் தோல்விக்கு உள்ளடி வேலை பா.ஜ., நிர்வாகிகள் 'வாட்ஸாப்' மோதல்
ADDED : ஏப் 23, 2024 08:18 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளராக அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.,யுமான நரசிம்மன் நிறுத்தப்பட்டார். இவரது வெற்றியை தடுக்கும் வகையில், பா.ஜ., மாவட்ட நிர்வாகிகளே ஈடுபட்டதாகவும், கட்சி தலைமை கொடுத்த பணத்தை அனைத்து நிர்வாகிகளுக்கும் பிரித்து கொடுக்கவில்லை எனவும், நிர்வாகிகள், 'வாட்ஸாப்'ல் மோதலில் ஈடுபடும் ஆடியோ வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி, பா.ஜ., கிழக்கு மாவட்ட செயலர் சிவக்குமார் கடந்த இரு தினங்களுக்கு முன், 'வாட்ஸாப்'ல், 'நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்து, வேட்பாளரின் தோல்விக்கு வழிவகுத்து விட்டனர்' என, ஆடியோ வெளியிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாஷ், மாவட்ட பொருளாளர் கவியரசு, ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சி தலைமையிலிருந்து கொடுத்த பணத்தை, சக்தி கேந்திரா நிர்வாகிகள் உட்பட யாருக்கும் கொடுக்கவில்லை. மாறாக எதிர்கட்சிகளுக்கு வேலை செய்தனர். கிருஷ்ணகிரியை, பா.ஜ., வெற்றி பெறும், 'ஏ' சென்டராக வைத்திருந்தது. அதை தற்போது குறிப்பிட்ட ஓட்டு பெறும், 'சி' சென்டராக மாற்றி விட்டது. கிருஷ்ணகிரியில், பா.ஜ., தோற்றால் அதற்கு அந்த நிர்வாகிகளே காரணம்,” என்றார்.
இதனால் சிவக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, குன்னத்துார் வெங்கடாசலம் உள்ளிட்ட பல நிர்வாகிகள், 'பணத்தை வாங்கி விட்டு, நீதான் செலவு செய்யவில்லை' என, 'வாட்ஸாப்'ல் ஆடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இந்த, 'வாட்ஸாப்' மோதல் குறித்து, மாவட்டத்திலுள்ள மற்ற நிர்வாகிகள் கூறுகையில், 'கிருஷ்ணகிரி மாவட்ட, பா.ஜ.,வில் நடந்த விபரங்கள் அனைத்தும், தேர்தல் பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகளுக்கு தெரியும். அவதுாறு பரப்புபவர்கள் மீது, என்ன நடவடிக்கை என்பதை கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று அறிவிப்போம். ஒவ்வொரு, பா.ஜ., தொண்டனும் வெற்றிக்காக உழைத்த நேரத்தில், அவதுாறு பரப்புவது தவறு' என்றனர்.

