/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கெலவரப்பள்ளி அணை பராமரிப்பு பணி நிறைவு கோடை மழை பொய்த்ததால் 8,000 ஏக்கர் பாசன வசதி பெறுமா?
/
கெலவரப்பள்ளி அணை பராமரிப்பு பணி நிறைவு கோடை மழை பொய்த்ததால் 8,000 ஏக்கர் பாசன வசதி பெறுமா?
கெலவரப்பள்ளி அணை பராமரிப்பு பணி நிறைவு கோடை மழை பொய்த்ததால் 8,000 ஏக்கர் பாசன வசதி பெறுமா?
கெலவரப்பள்ளி அணை பராமரிப்பு பணி நிறைவு கோடை மழை பொய்த்ததால் 8,000 ஏக்கர் பாசன வசதி பெறுமா?
ADDED : ஏப் 28, 2024 04:29 AM
ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணை ஷட்டர்கள் மாற்றப்பட்டு, நீர் சேமிக்கப்பட்டு வரும் நிலையில், கோடை மழை பெய்தால் தான், 2ம் போக பாசனத்திற்கு நீர் கிடைக்கும் என்ற நிலையில், விவசாயிகள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கெலவரப்பள்ளி அணையின், 7 மதகுகளின் ஷட்டர்கள் மற்றும் ஒரு மணல் போக்கி ஷட்டர் ஆகியவற்றை, அணை பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தில், 26 கோடி ரூபாய் மதிப்பில் மாற்றும் பணி கடந்தாண்டு ஜூன், 24 ல் நீர்வளத்துறை மூலம் துவங்கப்பட்டது. அதேபோல், மதகுகளை திறப்பதற்கு பயன்படும், டெக் பாலம் சீரமைப்பு பணி மற்றும் டெக் பாலத்திற்கு அடியில் மற்றொரு பாலம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அணை நீர்மட்டம், 24 அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வரும் நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. அணையிலிருந்து கடந்தாண்டு ஜூலை மாதம் முதல்போக பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. நடப்பாண்டு பிப்., மாதம் 2ம் போக சாகுபடிக்கும், அணை ஷட்டர்கள் பராமரிப்பு காரணமாக திறக்கப்படவில்லை. அதனால், 8,000 ஏக்கர் நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளன. விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
மதகுகள் மாற்றும் பணி முடிந்து, கடந்த, 15 ம் தேதி முதல், அணையில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, 118 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. 44.28 அடியில், 25.91 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. வரும் ஜூலை மாதம், முதல்போக பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், கோடை மழை பெய்தால்தான், பாசனத்திற்கு நீர் திறக்க முடியும் என்ற மனநிலையில் நீர்வளத்துறை உள்ளது. இதனால், 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் மேய்ச்சல் நிலமாக மாறி விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
இது குறித்து, நீர்வளத்துறையினரிடம் கேட்டபோது, 'அணையில், 38 அடி வரை நீர் இருப்பு இருந்தால் மட்டுமே, பாசனத்திற்கு நீர் திறப்பது சாத்தியம். இல்லா விட்டால் நீர் திறக்க முடியாது. நீர்பிடிப்பு பகுதியில், மே, ஜூன் மாதங்களில் கோடை மழை பெய்தால் மட்டுமே, பாசனத்திற்கு நீர் திறக்க முடியும்' என்றனர்.

