/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வடமாநில கொள்ளையன் மீது 10 வழக்கு நிலுவை
/
வடமாநில கொள்ளையன் மீது 10 வழக்கு நிலுவை
ADDED : ஜூலை 17, 2025 02:57 AM

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் காரை திருடிய வழக்கில், மூளையாக செயல்பட்டு, கேரளாவில் பிடிபட்ட வட மாநில ஏ.டி.எம்., கொள்ளையன் மீது, 10க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன-.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியில், 'மாருதி இகோ' காரை ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லாரியில் வந்த, வட மாநில கொள்ளையர்கள் மூவர் திருடி, கேரளாவிற்கு அந்த வாகனத்தை எடுத்து சென்றது தெரிந்தது.
ரகசிய அறை
இதை அறிந்த போலீசார் மற்ற மாவட்ட, மாநில போலீசாரை உஷார் படுத்தினர். கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பனங்காடு போலீசார் கன்டெய்னர் லாரியை நேற்று முன்தினம் மடக்கினர்.
சோதனையில், குளிர்சாதன பெட்டிகள் இருந்தன. அவற்றை, நெட்டுக்கல் என்ற ஊருக்கு எடுத்து செல்வதற்கான ஆவணங்களும் இருந்தன; கிருஷ்ணகிரியில் திருடப்பட்ட மாருதி இகோ கார் இல்லை.
மேலும், டிரைவர் சீட் பின்புறமுள்ள சீட்டின் பக்கவாட்டில் ரகசிய அறை அமைத்து, கொள்ளையடிக்க பயன்படுத்தும் காஸ் கட்டர், கிளாஸ் கட்டர் உள்ளிட்டவற்றை வைத்திருந்தனர்.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், லாரியிலிருந்த ஹரியானாவை சேர்ந்த அகமத், சாஹித், ராஜஸ்தானை சேர்ந்த சைக்குல் ஆகியோரை கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சைக்குல் என்பவனே, கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டுள்ளான்.
அவன் லாரியில், டெலிவரி செய்பவர்கள் உதவியுடன், டில்லி, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் பல கொள்ளைகளில் ஈடுபட்டிருப்பதும், அவன் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.
அவன் கொள்ளைக்கு செல்லும் இடங்களில், வாகனங்களை திருடி, கன்டெய்னர் லாரிக்குள் ஏற்றி செல்வதும், சிறிது துாரம் சென்ற பின், கடத்திய காரை இறக்கி, அதன் வாயிலாக, ஊருக்குள் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத ஏ.டி.எம்.,களை நோட்டமிட்டு, கொள்ளையில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தான்.
மடக்கி பிடிப்பு
கொள்ளை திட்டம் நிறைவேறியதும், காரை எங்காவது விட்டு, கன்டெய்னரில் தப்பி செல்வதையும் வழக்கமாக்கி உள்ளான்.
அதன்படி திட்டம் தீட்டிய சைக்குல், கடந்த, 14ல் காரை திருடி, கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில், தனியாக உள்ள ஏ.டி.எம்.,களை நோட்டமிட்டுள்ளான்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி டோல்கேட் வழியாக செல்லும்போது, போலீசார் தன்னை நெருங்குவதை உணர்ந்து, காரை விட்டு விட்டு, கன்டெய்னர் லாரியில் தப்பினான். கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் தகவலால் கேரளாவில் கூட்டாளிகளுடன் சிக்கினான்.
நேற்று முன்தினம், கேரளா பனங்காடு போலீஸ் ஸ்டேஷனில் அவனை விசாரித்தபோது, இயற்கை உபாதை கழிப்பதாக கூறி பாத்ரூமுக்குள் சென்ற சைக்குல், அங்கிருந்த ஜன்னல் வழியாக தப்பி, பக்கவாட்டில் இருந்த புதர்களுக்குள் ஓடி, அருகே ஆளில்லாத ஒரு வீட்டில் பதுங்கினான். அவனை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இந்நிலையில், கைதானவர்களை விசாரிக்க குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., மோகன்ராஜ் மற்றும் போலீசார் கேரள மாநிலம் விரைந்துள்ளனர்.