/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேன்கனிக்கோட்டைக்கு 11 யானைகள் விரட்டியடிப்பு
/
தேன்கனிக்கோட்டைக்கு 11 யானைகள் விரட்டியடிப்பு
ADDED : டிச 12, 2024 01:02 AM
ஓசூர், டிச. 12-
ஓசூர் வனச்சரகத்தில் முகாமிட்டிருந்த, 11 யானைகள் நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகம் சானமாவு காப்புக்காட்டில் மொத்தம், 3 குழுவாக, 32 யானைகள் முகாமிட்டிருந்தன. அவற்றை, 2 குழுக்களாக ஒன்றிணைத்த வனத்துறையினர், நேற்று முன்தினம் மாலை தேன்கனிக்கோட்டை வனப்பகுதி நோக்கி விரட்டினர். கெலமங்கலம் - உத்தனப்பள்ளி சாலையை, 11 யானைகள் ஒரு குழுவாகவும், 21 யானைகள் மற்றொரு குழுவாகவும் கடந்து சென்றன. இதில், 11 யானைகள் தேன்கனிக்கோட்டை வனச்சரகம் பேவநத்தம் வனப்பகுதிக்கு நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு விரட்டப்பட்டன. ஆனால், 21 யானைகள் அடங்கிய மற்றொரு குழு, ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒன்ன
குறுக்கி கரடு வனப்பகுதியில் தஞ்சமடைந்தன. அவற்றை நேற்று மாலை வரை வனத்துறையினர் கண்காணித்தனர். அதன் பின் அவற்றை, தேன்கனிக்கோட்டை நோக்கி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து, ராயக்கோட்டை, ஓசூர் வனச்சரகத்திற்கு யானைகள் திரும்பி, திரும்பி வருவதும், அவற்றை வனத்துறையினர் விரட்டுவதுமாக உள்ளனர். யானைகளால் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில், ராகி, தக்காளி, நெல், முட்டைகோஸ், சோளம் உள்ளிட்ட பயிர்கள் தொடர்ந்து சேதமாகி வருவதால், கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு, யானைகளை விரைந்து விரட்ட, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.