/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் கல்வி மாவட்ட தடகள போட்டிகள் 1,127 மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
ஓசூர் கல்வி மாவட்ட தடகள போட்டிகள் 1,127 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ஓசூர் கல்வி மாவட்ட தடகள போட்டிகள் 1,127 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ஓசூர் கல்வி மாவட்ட தடகள போட்டிகள் 1,127 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : பிப் 04, 2024 10:10 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடி ஸ்டேடியம் நடைபயிற்சியாளர்கள் அசோசியேஷன் மற்றும் குணம் மருத்துவமனை சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓசூர் கல்வி மாவட்ட அளவில், பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின. ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், பந்து எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. அரசு பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவ, மாணவியர் மொத்தம், 1,127 பேர் பங்கேற்றனர். இதில், 12, 14, 16, 18 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, டி.எஸ்.பி., பாபு பிரசாந்த், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் கம்பெனி எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் குப்புசாமி, குணம் மருத்துவமனை இயக்குனர் பிரதீப்குமார், ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ், புனித ஜான்போஸ்கோ பள்ளி தாளாளர் ஏஞ்சலா ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்து, மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டனர். சப் கலெக்டர் பிரியங்கா ஜோதியை ஏற்றி வைத்தார். சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன. போட்டிகளில் முதல், 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், துணை மேயர் ஆனந்தய்யா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் ஆகியோர் பரிசுகள், சான்றிதழ், கோப்பைகளை வழங்கினர். விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன.
ஏற்பாடுகளை, ஓசூர் அந்திவாடி ஸ்டேடியம் நடைபயிற்சியாளர்கள் அசோசியேஷன் தலைவர் மல்லேஷ், துணைத்தலைவர் செந்தில்குமார், செயலாளர் லிங்கம் உட்பட பலர் செய்திருந்தனர்.