/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
8 கி.மீ., துார குண்டும், குழியுமான சாலையால் 25 கிராம மக்கள் பாதிப்பு
/
8 கி.மீ., துார குண்டும், குழியுமான சாலையால் 25 கிராம மக்கள் பாதிப்பு
8 கி.மீ., துார குண்டும், குழியுமான சாலையால் 25 கிராம மக்கள் பாதிப்பு
8 கி.மீ., துார குண்டும், குழியுமான சாலையால் 25 கிராம மக்கள் பாதிப்பு
ADDED : டிச 01, 2024 01:15 AM
8 கி.மீ., துார குண்டும், குழியுமான
சாலையால் 25 கிராம மக்கள் பாதிப்பு
கிருஷ்ணகிரி, டிச. 1-
கிருஷ்ணகிரி அருகே, தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மோட்டூர் வழியாக கணவாய்பட்டி, மேலேரிக்கொட்டாய், கூரம்பட்டி, வேலம்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக, 25க்கும் மேற்பட்ட சிறு, குறு கிராமங்களை சேர்ந்த மக்கள், கிருஷ்ணகிரி நகருக்கு வந்து செல்கின்றனர். இச்சாலை போதிய பராமரிப்பு இல்லாததால், பல்வேறு இடங்களில் சேதமாகியும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறி உள்ளது. சில இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், அவ்வழியே கிராம மக்கள், அவதியுடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் சிலர் கூறுகையில், 'மோட்டூர் முதல் கூரம்பட்டி வரை உள்ள, 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள், கிருஷ்ணகிரி நகருக்கு செல்ல பிரதான சாலையாக உள்ளது. பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், விளைநிலங்களில் இருந்து சாகுபடி செய்த பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லும் விவசாயிகள் என, நாள்தோறும், 1,000க்கும் மேற்பட்டோர் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.
விழாக்காலங்களில், பிரசித்தி பெற்ற கணவாய்ப்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களும், இச்சாலை வழியாக தான் செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில் மலைக்குன்றுகள், வளைவுகள் நிறைந்து காணப்படுவதுடன், பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
இச்சாலையில் சென்று வரும் டூவீலர்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதுடன், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. பள்ளம் உள்ள இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பலமுறை புகாரளித்தும், போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பயனும் இல்லை. எனவே, தொடர்புடைய அலுவலர்கள், இச்சாலையை ஆய்வு செய்து, சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.