/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர், ஊத்தங்கரை விபத்துகளில் 4 பேர் பலி
/
ஓசூர், ஊத்தங்கரை விபத்துகளில் 4 பேர் பலி
ADDED : நவ 03, 2024 02:32 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ஊத்தங்கரையில் நடந்த இரு வேறு விபத்துகளில், 4 பேர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாகலுார் சாலை கிட்டப்பாகுட்டை பகுதியை சேர்ந்தவர் அஸ்லாம், 38; பெயின்டர். இவர் மனைவி நஸ்ரின், 32. இவர்களுக்கு அயானு, 7, மற்றும் ஒரு வயது குழந்தை அப்துல்லா என்ற இரு மகன்கள். அயானு, அப்பகுதி அரசு பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை அத்திப்பள்ளிக்கு சென்ற அஸ்லாம், அரசு பஸ்சில் குடும்பத்துடன் ஓசூர் திரும்பினார்.
பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர், டி மார்ட் அருகே நேற்றிரவு, 7:45 மணிக்கு பஸ்சிலிருந்து குடும்பத்துடன் இறங்கிய அஸ்லாம், மனைவி மற்றும் குழந்தைகளுடன் சாலையை கடக்க முயன்றார். குழந்தை அப்துல்லாவை தாய் நஸ்ரின் கையில் வைத்திருந்தார். சாலையை கடந்தபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி, அவர்கள் மீது மோதியது. இதில் நஸ்ரின் மற்றும் மகன் அயானு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அஸ்லாம் மற்றும் குழந்தை அப்துல்லாவை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
* கடலுார் மாவட்டம் மணப்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திக், 38. நேற்று காலை, மனைவி சந்தியா, 28, தந்தை வேலாயுதம், 66, சித்தப்பா ஜெயராமன், 58, ஆகியோருடன், ஓசூரில் கிரானைட் கல் வாங்க, தன் காரில் சென்று விட்டு, மாலையில் திரும்பினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, கிருஷ்ணகிரி -- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மாலை, 4:00 மணிக்கு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, திருவண்ணாமலை பெரியகோபுரம் பகுதியை சேர்ந்த அமானுல்லா, 31, டாட்டா தோஸ்து சரக்கு வாகனத்தில் ஓசூர் நோக்கி சென்றார். இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் கார், சாலையோர, 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சந்தியா, 28, ஜெயராமன், 58, ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வேலாயுதத்திற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கடலுாரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டாடா தோஸ்த் வாகனத்தை ஓட்டி வந்த அமானுல்லாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.