/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவி பலாத்காரம் எதிரொலி 4 ஆசிரியைகளும் இடமாற்றம்
/
மாணவி பலாத்காரம் எதிரொலி 4 ஆசிரியைகளும் இடமாற்றம்
ADDED : பிப் 09, 2025 01:17 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார விவகாரத்தில், பள்ளியில் பணியாற்றிய மற்ற நான்கு ஆசிரியைகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்த, 13 வயது மாணவியை, அதே பள்ளியின், மூன்று ஆசிரியர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்களை, பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். சம்பவத்தால் இரு நாட்களாக பள்ளி மூடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், பள்ளி மீண்டும் திறந்தும், குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுத்தனர்.
எஸ்.பி., தங்கதுரை, கல்வி அலுவலர்கள் பேச்சு நடத்தினர். அப்போது, ஒன்பது கோரிக்கைகளை மாணவர்களின் பெற்றோர் முன்வைத்து, கலெக்டரை சந்திக்க அனுமதி கேட்டனர். அதன்படி, நேற்று மதியம், மாணவியின் உறவினர்கள் உட்பட, 23 பேர் கலெக்டர் தினேஷ்குமாரை சந்தித்து பேசினர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு, உயர்கல்வி சலுகை, பள்ளிக்கு ஆசிரியைகள் மட்டுமே நியமனம், கண்காணிப்பு கேமரா, சுற்றுச்சுவர் மற்றும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினர்.
நேற்று மூன்றாவது நாளாக அரசு நடுநிலைப்பள்ளியில், அரசு துவக்கப்பள்ளி இணை இயக்குநர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் குழு பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியரிடம் விசாரணை நடத்தினர்.
கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'மாணவி வன்கொடுமை தொடர்பாக மூன்று ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தலைமை ஆசிரியை விடுப்பில் உள்ளார். மற்ற நான்கு ஆசிரியைகளும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இப்பள்ளிக்கு வேறு பள்ளிகளிலிருந்து, ஏழு ஆசிரியர்கள் நாளை பணியமர்த்தப்பட உள்ளனர்' என்றனர்.