/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மொபட்டில் 5 சிறுவர்கள் பயணம் உரிமையாளர் மீது பாய்ந்தது வழக்கு
/
மொபட்டில் 5 சிறுவர்கள் பயணம் உரிமையாளர் மீது பாய்ந்தது வழக்கு
மொபட்டில் 5 சிறுவர்கள் பயணம் உரிமையாளர் மீது பாய்ந்தது வழக்கு
மொபட்டில் 5 சிறுவர்கள் பயணம் உரிமையாளர் மீது பாய்ந்தது வழக்கு
ADDED : மார் 03, 2024 04:18 AM
ஓசூர் : ஓசூரில், ஐந்து சிறுவர்கள் ஒரே ஸ்கூட்டரில் பயணித்த வீடியோ வலைதளங்களில் பரவிய நிலையில், ஸ்கூட்டர் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன பதிவை ரத்து செய்து, சிறுவர்களுக்கு 25 வயது வரை ஓட்டுனர் உரிமம் வழங்கக் கூடாது என, மோட்டார் வாகன ஆய்வாளருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரை சாலையில் பிப்., 28 மாலை, 6:00 மணிக்கு, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் ஐந்து சிறுவர்கள் பயணம் செய்தனர்.
இது மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால், பொதுமக்கள் சிறுவர்கள் சென்ற வாகனத்தை புகைப்படம் எடுத்து, வலைதளங்களில் பரவ விட்டனர். இது குறித்த புகார் போலீசாருக்கும் சென்றது.
ஓசூர் டவுன் போலீஸ் விசாரணையில், ஸ்கூட்டர் உரிமையாளர், ஓசூர், மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த சிவருத்திரசாமி, 53, என்பதும், மொபட்டில் பயணித்த சிறுவர்களில் ஒருவர் அவரது மகன் என்பதும் தெரிந்தது.
சிவருத்திரசாமிக்கு, 25,000 ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில், போலீசார் நேற்று முன்தினம் அவர் மீது வழக்குப்பதிந்தனர்.
ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போலீசார், அடுத்த ஓராண்டிற்கு தற்காலிகமாக ஸ்கூட்டரின் பதிவு சான்றை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்தனர்.
மேலும், சிறுவர்களின் இந்த செயலுக்காக, அவர்களுக்கு 25 வயது பூர்த்தியாகும் வரை, 'டிரைவிங் லைசென்ஸ்' வழங்க இயலாத வகையில், மோட்டார் வாகன ஆய்வாளருக்கு, போலீசார் பரிந்துரை கடிதம் வழங்கியுள்ளனர்.
ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமாக வாகனத்தை ஓட்டுபவர்களின் வாகன பதிவு எண் தெரியும் வகையில் புகைப்படம் எடுத்து, 63832 91232 என்ற எண்ணிற்கு அனுப்பினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

