/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பராமரிப்பின்றி கிடந்த 5 நடுகற்கள் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
/
பராமரிப்பின்றி கிடந்த 5 நடுகற்கள் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
பராமரிப்பின்றி கிடந்த 5 நடுகற்கள் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
பராமரிப்பின்றி கிடந்த 5 நடுகற்கள் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
ADDED : அக் 07, 2025 01:20 AM
கிருஷ்ணகிரி, பராமரிப்பின்றி கிடந்த, 5 நடுகற்களை, அரசு அருங்காட்சியகத்தில் தாசில்தார் ஒப்படைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த வராகசந்திரம் கிராமத்தில், கபிலன் என்பவர், முன்னாள் பஞ்., தலைவர் நாராயணப்பாவின் நிலத்தில், 5 நடுகற்கள் கிடப்பதாக கூறியுள்ளார். அதன்படி, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, அரசு அருங்காட்சியகம் இணைந்து, குழு ஆலோசகர்
கோவிந்தராஜ் தலைமையில் அங்கு ஆய்வு மேற்கொண்டது. தகவலின்படி, தாசில்தார் ரமேஷ், ஆர்.ஐ., ராமநாதன் ஆகியோர், பாதுகாப்பற்று கிடந்த, 5 நடுகற்களை மீட்டு, மாவட்ட அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து, காப்பாட்சியர் சிவக்குமார் கூறியதாவது:
இந்த நடுகற்கள், 350 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. போரில் இறந்த வீரர்கள், அவர்களுடன் உடன்கட்டை ஏறிய அவர்களது மனைவியருக்காக எடுக்கப்பட்டது.
இதில், வீரன் குதிரை மீது அமர்ந்து கம்பீரமாய் வாளை ஓங்கி சண்டையிடும் பாவனையில் காட்டப்பட்டுள்ளான். அருகில் ஒருவன் குதிரையை பிடித்துள்ளான். மற்றவன் தன் கையில் கண்ணாடியை பிடித்துள்ளான். குடை, கொடி, சாமரம், விசிறி போன்ற கண்ணாடியும் தலைவனை குறிக்கும் அடையாள மாகும். அருகே, அவனது மனைவி உள்ளார்.
அடுத்த, 3 நடுகல்லிலும், ஒரே மாதிரி, 2 வீரர்கள் ஒரு கையில் குறுவாளும் மற்ற கையில் வாளை ஓங்கிய நிலையிலும், அவர்களுடன் உடன்கட்டை ஏறிய மனைவியரும் உள்ளனர். 5வது நடுகல்லில், பெண் ஒருவர் தன் கையில் மதுக்குடுவை, வாழைப்பழம் போன்ற பொருளுடன் உள்ளனர். இவருக்கு பின்னால் ஒரு வளைவு உள்ளது. இதேபோன்ற வளைவு, தனியே உள்ள வீரனுக்கும் இருப்பதால், இருவரும் தம்பதியாக இருக்கலாம். பொதுவாக இருவரையும் தனித்தனி கல்லில் வடிப்பது அரிதானது.
இந்த, 5 நடுகற்களும் ஒரே இடத்தில், ஒரே காலகட்டத்தை சேர்ந்த, ஒரே போரில் இறந்த வீரர்களுக்கானவை என தெரிகிறது. இது போன்ற பாதுகாப்பற்ற நிலையில் நடுகற்கள், தொல் பொருட்கள் இருந்தால், 86809 58340 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
குழு தலைவர் நாராயணமூர்த்தி, விஜயகுமார், பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், கடலரசு மூர்த்தி, பணியாளர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.