/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
10 மணி நேரத்தில் 5 ஆப்பரேஷன்; ஓசூரில் வெட்டப்பட்ட வக்கீல் கவலைக்கிடம்
/
10 மணி நேரத்தில் 5 ஆப்பரேஷன்; ஓசூரில் வெட்டப்பட்ட வக்கீல் கவலைக்கிடம்
10 மணி நேரத்தில் 5 ஆப்பரேஷன்; ஓசூரில் வெட்டப்பட்ட வக்கீல் கவலைக்கிடம்
10 மணி நேரத்தில் 5 ஆப்பரேஷன்; ஓசூரில் வெட்டப்பட்ட வக்கீல் கவலைக்கிடம்
ADDED : நவ 22, 2024 06:49 AM

ஓசூர்: ஓசூரில் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான வக்கீலுக்கு, 10 மணி நேரத்தில் ஐந்து ஆப்பரேஷன் செய்யப்பட்டும், தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ரங்கசாமிபிள்ளை தெருவை சேர்ந்த வக்கீல் கண்ணன், 30; ஓசூர், நாமல்பேட்டையை சேர்ந்த வக்கீல் குமாஸ்தா ஆனந்தகுமார், 39, என்பவரால், நேற்று முன்தினம் மதியம், நீதிமன்ற வளாக நுழைவாயிலில் சரமாரியாக வெட்டப்பட்டார். இது தொடர்பாக அவரையும், அவர் மனைவியான வக்கீல் சத்தியவதியையும், 33, ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
மனைவி சத்தியவதிக்கு, கண்ணன் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால், அவரை வெட்டியதாக, ஆனந்தகுமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கண்ணனின் உடலில் தலை, முகம், கழுத்து, தொடை, கை என, 11 இடங்களில் வெட்டு காயங்கள் உள்ளன. ஓசூரில் தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை வரை, 10 மணி நேரத்துக்கும் மேலாக, ஐந்து ஆப்பரேஷன் செய்யப்பட்டது. ஆனாலும் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நேற்று காலை கண் விழித்ததாகவும், குடும்பத்தினரை சந்திக்க வைத்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தேவைப்பட்டால் கண்ணனுக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படும் என, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். வக்கீல்களுக்கு உடனடி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கூறி, ஓசூரில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு, நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 2,000க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர். கொலை வெறி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஓசூர் நீதிமன்றத்தில், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீசாரின் சோதனைக்கு பிறகே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
குமாஸ்தாவின் 'பகீர்' திட்டம்
ஓசூர் வக்கீல்கள் சங்க தலைவர் ஆனந்தகுமார் கூறுகையில், ''இன்றும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும். கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது போல், தமிழகத்திலும் வக்கீல்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். வக்கீல் கண்ணனுக்கு, தமிழக அரசு உடனடியாக, 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும். சம்பவத்துக்கு இதுவரை முதல்வர், சட்டத்துறை அமைச்சர் அறிக்கை கொடுக்காதது வருத்தமளிக்கிறது,'' என்றார். ஜாமினில் வெளியே வருவதற்கான ஏற்பாடுகளை செய்த பிறகே, வக்கீல் மீது ஆனந்தகுமார் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.