/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6 நாள் தொல்லியல் பயிற்சி
/
பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6 நாள் தொல்லியல் பயிற்சி
ADDED : டிச 04, 2024 01:36 AM
கிருஷ்ணகிரி, டிச. 4-
தமிழர் பண்பாடு, நாகரீகம், தமிழகம் எங்கும் விரவியிருக்கும் தொல்லியல் குறித்த தகவல்களை, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொண்டு சேர்க்க, தொல்லியல் பயிற்சி அளிக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து, கடந்தாண்டில், 1,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல் இந்த கல்வியாண்டிலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தொல்லியல் துறை இணைந்து, 1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சியை, மண்டல அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, தர்மபுரி மண்டலத்தில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த, 60 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் முதல் வரும், 7 வரை, 6 நாட்கள் கிருஷ்ணகிரியில் தொல்லியல் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் தர்மபுரி கோவிந்த பிரகாஷ், கிருஷ்ணகிரி ஹேமலதா ஆகியோர் துவக்கி வைத்தனர். நேற்று ஓய்வு பெற்ற தொல்லியல் அலுவலர் ராஜகோபால், வட்டு எழுத்துக்கள் மற்றும் கிரந்த எழுத்துக்கள் பற்றி பயிற்சி அளித்தார்.
துணை முதல்வர் மயில்சாமி, முதுநிலை விரிவுரையாளர்கள் மாது, சரவணன், விரிவுரையாளர்கள் இந்திரா, கவிதா ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். ஓய்வுபெற்ற அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார்.