/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
1,003 நாட்களில் 60,000 பேருக்கு உணவு; அறம் செய்ய விரும்புவோர் சங்கம் சாதனை
/
1,003 நாட்களில் 60,000 பேருக்கு உணவு; அறம் செய்ய விரும்புவோர் சங்கம் சாதனை
1,003 நாட்களில் 60,000 பேருக்கு உணவு; அறம் செய்ய விரும்புவோர் சங்கம் சாதனை
1,003 நாட்களில் 60,000 பேருக்கு உணவு; அறம் செய்ய விரும்புவோர் சங்கம் சாதனை
ADDED : ஜூலை 09, 2024 06:08 AM
கிருஷ்ணகிரி: அறம் செய்ய விரும்புவோர் சங்கத்தினர், 1,003 நாட்களில், 60,475 நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், அறம் செய்ய விரும்புவோர் சங்கத்தில், ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள், டி.எஸ்.பி., வக்கீல்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள், அரசு ஊழியர்கள் என, 70 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் கடந்த, 2021 அக்., 10 முதல், பர்கூர் அரசு மருத்துவமனை நோயாளிகள், 50 பேருக்கும், சிறப்பு நாட்களில், 100 பேருக்கும் தினமும் காலை உணவை வழங்குகின்றனர். இதில், 4 இட்லி, ஒரு வடை, முட்டை, வாழைப்பழம், மூலிகை சாறு, குடிநீர் என சரிவிகித உணவாக வழங்குகின்றனர். கடந்த, 2023 பிப்., 21 வரை, 500 நாட்களில், 27,600 பேருக்கும், நேற்று வரை, 1,003 நாட்களில், 60,475 பேருக்கும் காலை உணவை வழங்கி உள்ளனர். இவர்களின் சேவையை பாராட்டி, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் முடிந்த அளவிற்கு பண உதவி அளித்து வருகின்றனர். நேற்று, பர்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) எழில் மணிவண்ணன் உணவு வழங்கினார்.
இது குறித்து அமைப்பின் தலைவரும், ஓய்வுபெற்ற கல்வி அதிகாரியுமான முனுசாமி கூறுகையில், ''அறம் செய்ய விரும்புவோர் சங்கம் சார்பில், அன்னை தெரசா உணவு முனையம் என்ற பெயரில், நோயாளிகளுக்கு உணவு வழங்கி வருகிறோம். உணவின் தரத்தை பரிசோதித்த பின், தினமும், 50 பேருக்கு உணவு வழங்கி வரும் நிலையில், தன்னார்வலர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில், பாரம்பரிய இனிப்புடன், 100 பேருக்கு உணவு வழங்குகிறோம். தன்னார்வலர்கள் பலர், உதவி செய்ய முன்வந்தால், மேலும் பலருக்கு உணவு வழங்க முயற்சி மேற்கொள்வோம்,'' என்றார்.துணைத்தலைவர் டாக்டர் வெங்கடேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.