/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
20 கிராமங்களை அச்சுறுத்திய சிறுத்தை 16 மாதங்களுக்கு பின் கூண்டில் சிக்கியது
/
20 கிராமங்களை அச்சுறுத்திய சிறுத்தை 16 மாதங்களுக்கு பின் கூண்டில் சிக்கியது
20 கிராமங்களை அச்சுறுத்திய சிறுத்தை 16 மாதங்களுக்கு பின் கூண்டில் சிக்கியது
20 கிராமங்களை அச்சுறுத்திய சிறுத்தை 16 மாதங்களுக்கு பின் கூண்டில் சிக்கியது
ADDED : ஜன 03, 2025 10:52 PM

தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த இஸ்லாம்பூர் கிராமம் அருகே, ஹாலிடே வேலி ரிசார்ட் பகுதியில், கடந்த, 2023 செப்., மாதம் ஓய்வு பெற்ற டாக்டர் விஜய் பணிக்கர், 76, என்பவரது நாயை சிறுத்தை அடித்துக் கொன்றது. அதே மாதத்தில் சனத்குமார் ஓடைப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை, சிறுத்தை தாக்கி கொன்று இழுத்துச் சென்றது.
அப்பகுதியைச் சுற்றி, சாமிபுரம், அடவிசாமிபுரம், அடைக்கலபுரம், தண்டரை, இஸ்லாம்பூர், பண்டேஸ்வரம், பேலுார், எண்ணேஸ்வரம், பென்னங்கூர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ளன.
இதனால், கிராம மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருந்த சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் எனக் கூறி, விவசாயிகள் மற்றும் பா.ஜ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த, 2023 செப்., மாதம் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகள் வைக்கப்பட்டன. ஆனால், 16 மாதமாக சிறுத்தை சிக்கவில்லை.
இதற்கிடையே கடந்த மாதம், 23ல், தேன்கனிக்கோட்டை அருகே அடவிசாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி தேவராஜ், 55, என்பவரது ஆட்டை சிறுத்தை தாக்கியது. இதனால், வனத்துறையினர் மீண்டும் சிறுத்தையை பிடிக்க தீவிரம் காட்டினர். அடவிசாமிபுரம் தனியார் குவாரி அருகே வனப்பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில், நேற்று முன் தினம் அதிகாலை, 3:00 மணிக்கு சிறுத்தை சிக்கியது.
வனத்துறையினர், சிறுத்தை பிடிபட்ட இடத்தில் இருந்து, 30 கி.மீ., தொலைவில், தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஜவளகிரி காப்புக்காட்டில், சிறுத்தையை விடுவித்தனர். கூண்டில் சிக்கியது ஆண் சிறுத்தை என்றும், அதற்கு, 4 முதல், 6 வயது இருக்கலாம் எனவும், வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறுத்தை பிடிபட்டதால், கிராம மக்கள் மற்றும் மேய்ச்சலுக்கு செல்லும் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

