/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தறிகெட்டு ஓடிய லாரி கடைக்குள் புகுந்து விபத்து
/
தறிகெட்டு ஓடிய லாரி கடைக்குள் புகுந்து விபத்து
ADDED : டிச 11, 2024 01:25 AM
தறிகெட்டு ஓடிய லாரி கடைக்குள் புகுந்து விபத்து
கிருஷ்ணகிரி, டிச. 11-
கிருஷ்ணகிரி அருகே, விறகு லோடு லாரி, கட்டுப்பாட்டை இழந்து, தேசிய நெடுஞ்சாலையோர கடைக்குள் புகுந்தது.
ஆந்திர மாநிலம், குப்பத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்திற்கு விறகு லோடு ஏற்றிய லாரி சென்றது. பள்ளிப்பாளையத்தை சேர்ந்த மாயக்கண்ணன், 45, என்பவர் ஓட்டினார். நேற்று முன்தினம் இரவு, 10:45 மணியளவில், கிருஷ்ணகிரி, ஆவின் மேம்பாலத்திலிருந்து சேலம் பிரிவு சாலை செல்லும் இடத்தில், கட்டுப்பாட்டை இழந்த லாரி நேராக, சைக்கிள் ஸ்டாண்ட் செல்லும் குறுகிய பாதையில் சென்று, கடைகளின் பக்கவாட்டு சுவரில் மோதி, லாரியின் முன்பக்கம் நசுங்கியது. லேசான காயத்துடன் டிரைவரை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் மீட்டனர்.
அப்பகுதிமக்கள் கூறுகையில், 'கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம், விபத்து பகுதியாக மாறி வருகிறது. சென்னை சாலையிலிருந்து பெங்களூரு, சேலம் திரும்பும் சாலைகள், மிகவும் இறக்கமாக உள்ளன. அப்பகுதியில் பகலில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், வாகனங்கள் வேகமாக செல்ல முடிவதில்லை. ஆனால், இரவு, 10:00 மணிக்கு மேல் போக்குவரத்து நெரிசல் குறைவால், வாகனங்கள் வேகமாக செல்வதால், கட்டுப்பாட்டை இழந்து, விபத்துகள் அதிகரித்துள்ளன. ஆவின் மேம்பாலம் அருகே, உயர்மின் கோபுர விளக்கு, தேசிய நெடுஞ்சாலையோர விளக்குகள் எரிவதில்லை' என்றனர்.

