/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெரிய மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா
/
பெரிய மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா
ADDED : ஆக 11, 2025 08:05 AM
கிருஷ்ணகிரி: பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, பக்தர்கள் தீ மிதித்து, சாட்டையடி வாங்கினர். கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி மேல்புதுாரில் அமைந்துள்ள, 300 ஆண்டு பழமையான பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடிப்பூரத் திருவிழா கடந்த மாதம், 31ல் கொடி ஏற்றுதல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து, 8ல், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், அம்மன் நகர்வலமும், 9ல், அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், அம்மன் நகர்வலம் ஆகியவை நடந்தது.நேற்று காலை, கங்கையில் புனித நீராடி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். பகல், 12:00 மணிக்கு, ஊர்மக்கள், பக்தர்கள் மா விளக்கை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். இதில், பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, அம்மன் வேடம் அணிந்து, கோவிலில் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு அந்தரத்தில் பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து, குழந்தையை சுமந்து வேண்டிக் கொண்டனர்.
பூசாரியின் கையால் ஏராளமான ஆண்களும், பெண்களும் சாட்டையடி வாங்கினர். இரவு, 7:00 மணிக்கு, ஆடல் - பாடல் நிகழ்ச்சியும், 8:00 மணிக்கு, வானவேடிக்கையும் நடந்தது.