/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தாறுமாறாக வரும் வாகனங்களால் விபத்து அதிகரிப்பு ஆவின் மேம்பாலத்தில் சிக்னல் அமைப்பது எப்போது
/
தாறுமாறாக வரும் வாகனங்களால் விபத்து அதிகரிப்பு ஆவின் மேம்பாலத்தில் சிக்னல் அமைப்பது எப்போது
தாறுமாறாக வரும் வாகனங்களால் விபத்து அதிகரிப்பு ஆவின் மேம்பாலத்தில் சிக்னல் அமைப்பது எப்போது
தாறுமாறாக வரும் வாகனங்களால் விபத்து அதிகரிப்பு ஆவின் மேம்பாலத்தில் சிக்னல் அமைப்பது எப்போது
ADDED : ஜன 03, 2025 01:22 AM
கிருஷ்ணகிரி, ஜன. 3-
கிருஷ்ணகிரி ஆவின் மேல்பாலத்திற்கு சிக்னல் அமைக்காததாலும், நான்கு புறங்களில் இருந்து அதிவேகத்தில் வாகனங்கள் வருவதாலும் விபத்துகள் அதிகரித்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழக, கர்நாடக, ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள மாவட்டமாகும். கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்கின்றன. அதே போல கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரக்கூடிய வாகனங்களும் கிருஷ்ணகிரி வழியாக செல்கின்றன.
பெங்களூரு, சேலம், சென்னை, குப்பம் மற்றும் திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் பகுதியாக, கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அமைந்துள்ளது. கன்னியாகுமரி - காஷ்மீர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி பகுதியில் விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, ஆவின் மேம்பாலம், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம், ராயக்கோட்டை மேம்பாலம் அமைக்கப்பட்டன.
ஆனால், ஆவின் மேம்பாலத்தில் விபத்துகள் குறைந்தபாடில்லை. இதற்கு முக்கிய காரணம், இங்கு சிக்னல் அமைக்கப்படவில்லை. சென்னையிலிருந்து பெங்களூரு செல்பவர்களும், சேலத்திலிருந்து சென்னை செல்பவர்களும் ஆவின் மேம்பாலத்தின் கீழ் உள்ள பிரிவு சாலை வழியாகவே செல்ல வேண்டும். நகரிலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு வருவோர், மேம்பாலத்தை சுற்றி வராமல், சாலையின் குறுக்கே எதிர் திசையில் வருவதாலும், நான்கு புறத்திலும் கட்டுப்பாடின்றி மிக வேகமாக வாகனங்கள் வருவதாலும், விபத்துகள் நடக்கின்றன.
ஆவின் மேம்பாலம் அருகிலுள்ள உயர்மின்கோபுர விளக்கும் சரிவர எரிவதில்லை, சாலையில் ரிப்ளக்டர்கள், எச்சரிக்கை பலகைகளும் இல்லை. கடந்த, டிச.,9ல் குப்பத்திலிருந்து மரலோடு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இரவு நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இல்லை.
எனவே மிக அதிக விபத்து பகுதியாக மாறி வரும் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தில் சிக்னல் அமைத்து, வாகனங்கள் இயங்குவதை முறைப்படுத்த வேண்டும். நகருக்குள்ளிலிருந்து விதிமுறைகளை மீறி வரும் வாகனங்களை தடுத்து அபராதம் விதிக்க வேண்டும். சாலையில் ரிப்ளக்டர்கள், எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.

