/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., கவுன்சிலர்களை குறிவைத்து தூக்கும் அ.தி.மு.க.,
/
தி.மு.க., கவுன்சிலர்களை குறிவைத்து தூக்கும் அ.தி.மு.க.,
தி.மு.க., கவுன்சிலர்களை குறிவைத்து தூக்கும் அ.தி.மு.க.,
தி.மு.க., கவுன்சிலர்களை குறிவைத்து தூக்கும் அ.தி.மு.க.,
ADDED : ஜன 15, 2024 11:21 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்களை, கூவத்துார் பார்முலா பாணியில் துாக்கும் முயற்சியில், அ.தி.மு.க.,வும், அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் தி.மு.க.,வும் ஈடுபட்டுள்ளதால், அரசியல் களம்
சூடுபிடித்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து, பணிகளை துவங்கி விட்டன. கிருஷ்ணகிரி தொகுதியை பொருத்தவரை, 2019ல் காங்., செல்லக்குமார் வெற்றி பெற்றார். அதேசமயம், 2021 சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் ஆறு தொகுதியில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணி தலா மூன்றை வென்றன.
லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க சிரமமான தொகுதிகளில் ஒன்றாக கிருஷ்ணகிரி உள்ளது. கடந்த முறை போல் காங்., கட்சிக்கு 'சீட்' வழங்கப்பட்டால் வெற்றி வாய்ப்பு நிச்சயமாக இருக்காதென்று தி.மு.க.,வினர் கூறுகின்றனர். ஓசூர், தளி பகுதியில் செல்வாக்கை வளர்த்துள்ள, பா.ஜ.,வும் தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளதால், வெற்றியை கணிப்பதில் கடும் இழுபறி உள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை வளைப்பதில், அ.தி.மு.க., அதிக ஆர்வம் காட்டி வருகிறது. ஊத்தங்கரை, வேப்பனஹள்ளி பகுதிகளில், தி.மு.க., - பா.ம.க., - காங்., கட்சி முக்கிய நிர்வாகிகள், அ.தி.மு.க.,வின் முனுசாமி முன்னிலையில் கட்சி தாவியுள்ளனர்.
பர்கூர் ஒன்றிய முன்னாள் தி.மு.க., செயலாளர் கோவிந்தராசன். தற்போது காரக்குப்பம் பஞ்., தலைவராக உள்ளார். இவரது மனைவி கவிதா ஒன்றியக்குழு தலைவராக உள்ளார். பர்கூர் ஒன்றியத்தில் மொத்தம், 30 கவுன்சிலர்களில், தி.மு.க., 17, அ.தி.மு.க., 13 இடங்களை பிடித்தன.
கோவிந்தராசன், 25 ஆண்டுகளாக, தி.மு.க.,வுக்காக பணியாற்றியவர். அ.தி.மு.க., கோட்டையாக விளங்கிய பர்கூர் தொகுதியில், தி.மு.க.,வை வளர்த்த
அவருக்கு கடந்த, 2016ல், பர்கூர் தொகுதியில் போட்டியிட அக்கட்சி தலைமை, 'சீட்' வழங்கியது. ஆனால், 882 ஓட்டுகளில் தோற்றார். கடந்த, 2021ல் பர்கூர் சட்டசபை தேர்தலில் தொழிலதிபர் மதியழகனுக்கு, தி.மு.க., 'சீட்' வழங்கியது. இதை எதிர்த்து அப்போது, தி.மு.க.,ஒன்றிய கவுன்சிலராக இருந்த கோவிந்தராசன் தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் தலைமையின் கட்டளைக்கு அடிபணிந்து தேர்தல் பணியாற்றியதில், மதியழகன் வெற்றி பெற்றார்.
அடுத்து நடந்த, டவுன் பஞ்., தேர்தலில், பர்கூர், எம்.எல்.ஏ., மதியழகன் பரிந்துரைப்படி, பாலன் என்பவருக்கு, தி.மு.க., 'சீட்' வழங்கியது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்த கோவிந்தராசன்,
சந்தோஷ்குமார் என்பவரை டவுன் பஞ்., தலைவராக்க திட்டமிட்டு, 10 கவுன்சிலர்களை துாக்கி, தான் நினைத்த சந்தோஷ்குமாரை டவுன் பஞ்., தலைவராக்கினார். இதனால் மதியழகன், கோவிந்தராசனிடையே, கோஷ்டி பூசல் ஏற்பட்டது.
மேலும் அப்போது மாவட்ட செயலாளராக இருந்த செங்குட்டுவன், ஒன்றிய செயலாளராக இருந்த கோவிந்தராசன் பதவிகளை, தி.மு.க., பறித்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., மாவட்ட செயலாளராக மதியழகன் நியமிக்கப்பட்டார். அதன்பின் கோவிந்தராசன் முற்றிலும் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். பேனர்களில் கூட அவர் பெயர், போட்டோக்களை போட அனுமதிக்கப்படவில்லை.
இதனால் மேலும் கோபமடைந்த கோவிந்தராசன், தன் ஆதரவு ஒன்றிய கவுன்சிலர்களை சேர்த்து தனியாக செயல்பட்டார். வரவுள்ள லோக்சபா தேர்தலில், மதியழகனுக்கு எதிராக அ.தி.மு.க.,விற்கு வலுசேர்க்கும் வகையிலும், 2026 சட்டசபை தேர்தலில், தனக்கு எம்.எல்.ஏ., 'சீட்' வேண்டும் என்ற நிபந்தனையுடன், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்தது.
இந்நிலையில் கடந்த, 7ல் கோவிந்தராசன் தனக்கு ஆதரவான பர்கூர், தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள், 8 பேர், 3 பஞ்., தலைவருடன் சேலத்திற்கு சென்று, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி முன்னிலையில், இ.பி.எஸ்.,ஐ சந்தித்து தங்களை, அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இதனால் ஆளும் கட்சியிலிருந்து ஒன்றிய கவுன்சிலர்கள், அ.தி.மு.க.,வுக்கு சென்றது பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து கோவிந்தராசன் கூறுகையில், ''மாவட்ட செயலாளர் மதியழகன் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே, கட்சியிலிருந்து வெளியேறினேன்,'' என்றார். மாவட்ட செயலாளர் மதியழகனோ, 'கோவிந்தராசன் சென்றதால், கட்சிக்கு பின்னடைவு இல்லை' என்றார்.
இந்நிலையில், தி.மு.க.,விலிருந்து, அ.தி.மு.க.வுக்கு தாவிய, ஒன்றிய, தி.மு.க., கவுன்சிலர்களில் இருவர், கிளைச் செயலாளர்கள் மற்றும் பா.ஜ., நிர்வாகி ஆகியோர் நேற்று, தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர்.
மீண்டும், தி.மு.க.,வில் இணைந்த பர்கூர், 9வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தன் கூறியதாவது:
என் வார்டு கொண்டப்பநாயனப்பள்ளி, அச்சமங்கலத்தில் வருகிறது. என்னை, தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் அழுத்தத்தால், அ.தி.மு.க.,வின் இணைய ஒப்புக் கொண்டேன். இதற்காக என்னிடம் பேரமும் பேசினர். எங்கள் பஞ்.,களில் நிறைய நலத்திட்ட பணிகள், தி.மு.க., ஆட்சி காலத்தில் செய்யப்பட்டது. 3 தலைமுறைகளாக, தி.மு.க.,வில் இருந்த எங்கள் குடும்பத்தினர், நான் அணி மாறியதை ஏற்கவில்லை. எனவே, தாய் கழகமான, தி.மு.க.,வில் மீண்டும் இணைந்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.
17வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்
லட்சுமி அண்ணாமலை கூறியதாவது:
சூளாமலை, அஞ்சூர் பஞ்.,களுக்கு உட்பட்ட பகுதியில், தி.மு.க.,
சின்னத்தில் நின்று நான் வெற்றி பெற்றேன். இந்நிலையில், என் கணவர் அண்ணா
மலையை முன்னாள், தி.மு.க ஒன்றிய செயலாளர் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி கடந்த, 6ல், அழைத்து சென்றார். ஆனால் காரில் அழைத்துசெல்லப்பட்ட அவரை, இரவு முழுவதும் காரிலேயே சுற்ற வைத்து, கூவத்துார் பாணியில் இ.பி.எஸ்.,சிடம் அழைத்து சென்று நிற்க வைத்துள்ளனர். இதையறிந்த நாங்கள் அவரை வீட்டில் சேர்க்கவில்லை. இன்று, என் கணவருடன் மீண்டும், தி.மு.க.,வில் இணைந்துள்ளோம். தி.மு.க.,விலிருந்து அணி மாறும் எண்ணம் இல்லை. இதுபோல், பல கவுன்சிலர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால், அ.தி.மு.க.,வுக்கு சென்றுள்ளனர். அவர்களும் விரைவில் வருவர். இவ்வாறு, அவர் கூறினார்.
இது தவிர பா.ஜ., ஒன்றிய இளைஞரணி தலைவர் கணேசன், அணி மாறிய கிளை செயலாளர்கள் முனிராஜ், சக்ரவர்த்தி ஆகியோரும், தி.மு.க.,வில் இணைந்தனர்.
அதேபோல காவேரிப்பட்டணத்தில், ஒன்றிய, தி.மு.க., கவுன்சிலர்கள் மூவர், அ.தி.மு.க., 5 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி வருவதாகவும், அவர்களை அணி மாறாமல் இருக்க, தி.மு.க.,வினர் கண்காணித்தும் வருகின்றனர். கிருஷ்ணகிரி லோச்சபா தேர்தலில், பா.ஜ., களம் இறங்கவுள்ள நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகளை கூவத்துார் பாணியில் துாக்கி வருகிறது.
அ.தி.மு.க., சார்பில் முனுசாமியின் மகன் சதீஷ்குமாரை களமிறக்க திட்டமிட்டே, அ.தி.மு.க.,வினர் காய் நகர்த்துகின்றனர். அதற்காக தி.மு.க., நிர்வாகிகளை பகடை காய்களாக ஆக்கியுள்ளதாகவும் கூறுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 3, 4 மாதங்கள் உள்ள நிலையில், திராவிட கட்சிகளின் அணி தாவல் தொடரும். நிர்வாகிகள் அணி மாறுவதால் வெற்றி வாய்ப்பும் யாருக்கு கிடைக்கும் என்பதில், ஓட்டு எண்ணிக்கை நிறைவில் மட்டுமே தெரியும் பதிலாக உள்ளது.