ADDED : ஆக 08, 2025 01:11 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில், வேளாண் துணை சார்பில், அட்மா திட்டத்தில், மாவட்ட அளவிலான அங்கக வேளாண் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர். ரத்தசாலி, கருப்பு கவுனி, பூங்கார் போன்ற பல்வேறு ரக பயிர்களை
பயிரிட்டு வருகின்றனர். அங்கக வேளாண்மையை பயன்படுத்துவதன் மூலம். மண்ணின் கரிம வளம் அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. கரியை பல்வேறு உபயோகத்திற்காக பயன்
படுத்தினர். தற்போது வேப்பங்குச்சி, கரி ஆகியவற்றை பல் துலக்க வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில், பூனைக்காலி விதை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பூனைக்காலி வளர்ப்பதால், களைகளை கட்டுப்படுத்துவதோடு, தழைச்சத்தை நிலை நிறுத்தி, மண்ணின் வளத்தை மேம்படுத்துகிறது. இம்மாவட்டத்தை சேர்ந்த எம்.டெக் மாணவி, மாங்கோ பீல் என்று சொல்லக்கூடிய மாம்பழ தோலில் இருந்து ஆர்கானிக் உரம் தயாரித்து, அந்த உரம் மற்ற உரங்களை விட, அதிக வீரியத்துடன் இருப்பதால், செடிகளுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளார்.
விவசாய பொருட்களை முழுவதுமாக பயன்படுத்தி எப்படி லாபம் ஈட்டலாம் என்பதை இக்கண்காட்சி மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
இதில், வேளாண் இணை இயக்குனர் (பொ) காளிமுத்து, பையூர் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் அனீஷாராணி, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

