/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'கொள்கை ரீதியாகவே கூட்டணி; அ.தி.மு.க., யாரை கண்டும் அஞ்சாது'
/
'கொள்கை ரீதியாகவே கூட்டணி; அ.தி.மு.க., யாரை கண்டும் அஞ்சாது'
'கொள்கை ரீதியாகவே கூட்டணி; அ.தி.மு.க., யாரை கண்டும் அஞ்சாது'
'கொள்கை ரீதியாகவே கூட்டணி; அ.தி.மு.க., யாரை கண்டும் அஞ்சாது'
ADDED : ஜன 24, 2025 04:12 AM
ஓசூர்: ''கொள்கை ரீதியாகவே கூட்டணி, அ.தி.மு.க., யாரை கண்டும் அஞ்சாது,'' என, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் நடந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:'அவதுாறு பரப்பியும், வெற்று வாக்குறுதிகளை கொடுத்தும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வரப்பார்க்கிறது' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். வெற்று வாக்குறுதியை பற்றி அவர், தன்னை மறந்து கூறியுள்ளார். ஏனெனில், 520 வாக்குறுதிகளை கொடுத்த அவர், அதை நிறைவேற்றி விட்டாரா என, மனசாட்சியுடன் சிந்தித்து பார்த்து பேசவேண்டும். அவருக்கு தேர்தல் ஜூரம், தோல்வி பயம் காரணத்தால் பிதற்றுகிறார். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மக்களிடத்தில், தெளிவாக உண்மைகளை எடுத்து கூறி வருகிறார்.
இ.பி.எஸ்., உறவினர் வீட்டில் ரெய்டு குறித்து, பா.ஜ., சட்டசபை குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், 'இ.பி.எஸ்.,சுடன் பா.ஜ., அமர்ந்து பேசினாலே, கூட்டணி உருவாகி விடும்' என பேசியது, நல்ல அரசியல்வாதியாக பார்க்க தோன்றுகிறது. ரெய்டு யார் வீடுகளிலும் நடக்கும் என பேசியது, மிரட்டும் பாணியில் உள்ளது. நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க.,வில் அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். கட்சியை பற்றி நன்கு அறிந்தவர். அ.தி.மு.க., யாரை கண்டும் அஞ்சாது, கொள்கை ரீதியாகவே கூட்டணி அமையும்.
கோமியத்தை குடித்தால் நன்மை தரும் என, ஐ.ஐ.டி., இயக்குனர் கூறியதும், அதற்கு பா.ஜ., ஆதரவு தெரிவிப்பதும், அவர்களது தனிப்பட்ட கருத்து. மொரார்ஜி தேசாய் என்று ஒருவர் இருந்தார். அவர் பெயரை கூறிவிட்டேன். அதற்கு மேல், அது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

