/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அதிவிரைவு மீட்பு குழுவுக்கு விலங்கை கையாள கவச உடை
/
அதிவிரைவு மீட்பு குழுவுக்கு விலங்கை கையாள கவச உடை
ADDED : நவ 07, 2024 12:56 AM
அதிவிரைவு மீட்பு குழுவுக்கு
விலங்கை கையாள கவச உடை
ஓசூர், நவ. 7-
ஓசூர் வனக்கோட்டத்தில், சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளை கையாளும் வகையில், வனத்துறையின் அதிவிரைவு மீட்பு குழுவினருக்கு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் கடந்த, 2016 ல் வனவிலங்குகளை மீட்கவும், கண்காணிக்கவும், மனித - விலங்கு மோதலை கட்டுப்படுத்தவும், வனத்துறை சார்பில், 10 பேர் அடங்கிய அதிவிரைவு மீட்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்குழுவிற்கு, ஓசூர் அருகே கோபசந்திரத்தில் தனியாக ஒரு கட்டடமும், வன உயிரின மீட்பு வாகனங்களும் வழங்கப் பட்டுள்ளன. வன உயிரினங்கள் காப்புக்காடுகளை விட்டு வெளியேறி, குடியிருப்பு, அரசு புறம்போக்கு மற்றும் விவசாய நிலங்களுக்கு வந்து மனிதர்களையோ, கால்நடைகளையோ தாக்கி, பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம், அதி விரைவு மீட்பு குழுவினர் மூலம், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை பஞ்., உட்பட்ட பகுதிகளில் சிறுத்தை சுற்றித்திரிகிறது. அதேபோல், அன்னியாளத்தில் கிரஷர் பகுதியில் குட்டியுடன் சிறுத்தை சுற்றித்திரிகிறது. இதனால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். இதுபோன்ற நேரங்களில், சிறுத்தைகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கையாள வேண்டியுள்ளது.
சிறுத்தை, கரடி போன்ற விலங்கு உண்ணிகளை, அதி விரைவு மீட்பு குழுவினர் கையாளும்போது அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள கவச உடைகள், தலைக்கவசம், இதர உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றை, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி நேற்று பார்வையிட்டார். அப்போது அவர், வனவிலங்குகள் காப்புக்காடுகளை விட்டு வெளியேறி சுற்றித்திரிந்தால், 18004 255135 என்ற, இலவச எண்ணில் தகவல் தெரிவிக்க, மக்களை கேட்டுக்கொண்டார்.