/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அம்மனேரி கிராமத்தில் அர்ச்சுனன் தபசு நாடகம்
/
அம்மனேரி கிராமத்தில் அர்ச்சுனன் தபசு நாடகம்
ADDED : ஏப் 18, 2025 02:32 AM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், கூளியம் பஞ்., அம்மனேரி, ஒம்பலகட்டு, சவுளூர் ஆகிய கிராமங்களுக்கு சொந்தமான திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த மகோற்சவ திருவிழா நடந்து வருகிறது. இதில், நாடகக்குழுவினரின், கிருஷ்ணன் பிறப்பு, பாண்டவர் பிறப்பு, அர்ச்சுனன் அம்பு வளைப்பு, காண்டா வனம், பாஞ்சாலி துகில் உரிதல் உள்ளிட்ட மஹாபாரத இதிகாச நாடகங்கள் நடந்து வந்தது. இதன் முக்கிய நிகழ்வான அர்ச்சுனன் தபசு நாடகம் நேற்று காலை நடந்தது. கவுரவர்களை கூண்டோடு அழிக்க, சிவபெருமானிடம், பாசுபதம் என்ற ஆயுதம் பெற வேண்டி, அர்ச்சுனன், தபசு மரத்தின் கீழ், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை செய்தபின், தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், குழந்தை பாக்கியம் வேண்டி, பெண்கள் ஈரத்துணியுடன் பூஜை செய்தபின், தபசு மரத்தை சுற்றிலும் படுத்துக் கொள்ள, அர்ச்சுனன் வேடம் அணிந்தவர் அவர்களுக்கிடையில் நடந்து சென்று ஆசி வழங்கினார். பின்னர் அர்ச்சுனன் வேடமணிந்த நாடக கலைஞர், தபசு மரத்தின் ஒவ்வொரு படிக்கட்டுக்கும், பாடல் பாடியபடி தபசு மரம் ஏறினார். விழா ஏற்பாடுகளை ஒம்பலக்கட்டு, சவுளூர் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் செய்துள்ளனர்.