/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
/
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
ADDED : டிச 24, 2024 01:44 AM
கிருஷ்ணகிரி, டிச. 24-
'தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேற்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில், கடந்த மாதம் பட்டப்பகலில் வக்கீல் கண்ணன் என்பவர் வெட்டப்பட்டார். இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த, 20ல், திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில், வழக்கில் ஆஜராக வந்த மாயாண்டி, 22, என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், போலீசார் துப்பாக்கிகள் கையில் வைத்திருந்தால், குற்றம் நடப்பதற்கு முன் தடுத்திருக்கலாம் என, நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.
இதையடுத்து, 'தமிழக நீதிமன்றங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு செய்ய வேண்டும். பணியிலுள்ள எஸ்.ஐ.,க்கள் பிஸ்டல் வைத்திருக்க வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்களுக்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை என மொத்தம், 5 நீதிமன்ற வளாகங்கள் உள்ளன. அங்கு நேற்று முதல், 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இது குறித்து மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கூறுகையில், ''கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் எஸ்.ஐ., தலைமையில், நுழைவாயில் ஒன்றில், 3 போலீசார், நுழைவுவாயில், 2ல், இரு போலீசார் பாதுகாப்பு பணிக்காக போடப்பட்டுள்ளனர்.
அதேபோல ஓசூர் நீதிமன்றத்தில் எஸ்.ஐ., தலைமையில், 5 போலீசாரும், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் ஒரு எஸ்.ஐ., ஒரு போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளனர். இதில், எஸ்.ஐ.,களுக்கு பிஸ்டல் வழங்கப்பட்டு, நீதிமன்ற நுழைவுவாயில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்ற பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசாரும் அங்கேயே பணியில் தொடர்வர்,'' என்றார்.
* தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.