/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆயுத பூஜை: கிருஷ்ணகிரியில் பொரி தயாரிப்பு பணி தீவிரம்
/
ஆயுத பூஜை: கிருஷ்ணகிரியில் பொரி தயாரிப்பு பணி தீவிரம்
ஆயுத பூஜை: கிருஷ்ணகிரியில் பொரி தயாரிப்பு பணி தீவிரம்
ஆயுத பூஜை: கிருஷ்ணகிரியில் பொரி தயாரிப்பு பணி தீவிரம்
ADDED : அக் 09, 2024 06:39 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஆயுத பூஜைக்கான பொரி தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்நாளில், கடை மற்றும் வணிக வளாகங்களை புதுப்பித்து, பூஜை செய்து, புதுக்கணக்குகளை தொடங்குவர். இதில், பொரி பிரதான பொருளாக விளங்குவதால், ஒவ்வொரு கடை மற்றும் வணிக வளாகங்களில் இருந்து பல மூட்டை பொரியை பிரசாதமாக வழங்கி வருகின்றனர். வரும், 11ல் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையும், 12ல் விஜய தசமியும் கொண்டாடப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்ட மண்டிகளில், கடந்த ஒரு மாதமாக பொரி தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு, 100 லிட்டர் அளவு கொண்ட, 400 மூட்டை பொரி தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாராகும் பொரி, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரியில் பொரி தயாரிக்கும் கிருஷ்ணகுமார், 71, கூறியதாவது: பொரி உற்பத்திக்கு தேவையான அரிசி விலை கடந்தாண்டு, 40 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது, 43 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல் ஆட்களின் கூலியும், மின் கட்டணமும் உயர்ந்துள்ளன. ஆனாலும், 100 லிட்டர் அளவு கொண்ட ஒரு மூட்டை பொரியின் விலை கடந்த ஆண்டை போலவே, 420 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது. இந்தாண்டு மழையின்றி பொரி உற்பத்தி அதிகரித்ததால், விலையில் மாற்றம் ஏற்படவில்லை. பொரி ஆர்டர்களும் கடந்த ஆண்டை போலவே உள்ளன. இந்த மாவட்டத்தில் மட்டும், 50,000 மூட்டை பொரி, விற்பனையாகும் என எதிர்பாக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

