ADDED : மே 29, 2025 01:13 AM
கிருஷ்ணகிரி, ஓசூர் அடுத்த குலுசாமனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீதாஞ்சலி, 24. கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் காலை, 8:50 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து, 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சை டிரைவர் அன்பு ஓட்டி வந்துள்ளார். குருபரப்பள்ளி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் வந்தபோது அதிகவலியால் கீதாஞ்சலி அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஆம்புலன்சை டிரைவர் அன்பு, சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினர். பின்னர் ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் சிவரஞ்சனி, பிரசவம் பார்த்ததில், கீதாஞ்சலிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய், சேய் ஆகிய இருவரையும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்கள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.