/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசியல்வாதிகள், அதிகாரிகள் 'சிண்டிகேட்'டால் மூடல் காவேரிப்பட்டணம் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்படுமா?
/
அரசியல்வாதிகள், அதிகாரிகள் 'சிண்டிகேட்'டால் மூடல் காவேரிப்பட்டணம் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்படுமா?
அரசியல்வாதிகள், அதிகாரிகள் 'சிண்டிகேட்'டால் மூடல் காவேரிப்பட்டணம் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்படுமா?
அரசியல்வாதிகள், அதிகாரிகள் 'சிண்டிகேட்'டால் மூடல் காவேரிப்பட்டணம் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்படுமா?
ADDED : நவ 02, 2024 04:18 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவேரிப்பட்டணம் உழவர் சந்தையை, மாவட்ட கலெக்டரே தலையிட்டு, மீண்டும் திறந்து வைத்த நிலையிலும், அரசியல்வாதிகள், வியபாபாரிகள் சிண்டிகேட்டால் மீண்டும் மூடப்பட்டுள்ளது. அதை திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, ஓசூரில் இரு இடங்கள், தேன்கனிக்கோட்டை என, 4 இடங்களில் உழவர்சந்தை சிறப்பாக செயல்படுகிறது. காவேரிப்பட்டணத்தில், 2009 பிப்., 23 ல் உழவர் சந்தை திறக்கப்பட்டு, சில மாதங்களில் மூடப்பட்டது. அதன்பின் விவசாயிகள் தரப்பில் பல்வேறு மனுக்கள் அளித்தும், பலர் அழுத்தம் கொடுத்தும் திறக்கவில்லை.கடந்த, 2023 டிச.,ல் அங்கு பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் சரயு, உழவர் சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி கடந்தாண்டு, டிச., 28 ல் காவேரிப்பட்டணம் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதம் கூட நீடிக்காமல், மீண்டும் உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
காவேரிப்பட்டணத்தில், பாலக்கோடு சாலையில் உழவர்சந்தை திறக்கப்பட்டது. ஆனால், சாலையோர காய்கறிகடை வியாபாரிகளுக்கு ஆதரவாக மட்டுமே, அதிகாரிகள் செயல்பட்டு வந்தனர். அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிண்டிகேட் அமைத்து, இடைத்தரகர்களின் ஆதரவோடு வியாபாரிகள் அதே பகுதியில் சாலையோரங்களில் கனஜோராக வியாபாரம் செய்கின்றனர்.
இதில், ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடில்லாமல் அவர்களுடன் அதிகாரிகள் கைகோர்த்து விடுகின்றனர். மேலும், சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
கடை வியாபாரிகள், காய்கறி கழிவுகளை சாலையில் வீசி செல்வதும் வாடிக்கையாகி விட்டது. உழவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை குறைந்த லாபத்தில் நேரடியாக விற்பனை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட உழவர்சந்தையை செயல்பட விடாமல், அரசியல்வாதிகளே இடையூறாக உள்ளனர். இடைத்தரகர்களை வைத்து, எங்களை மிரட்டுகின்றனர். நாங்களும் கிடைக்கும் விலைக்கு அவர்களுக்கு கொடுத்து விட்டு செல்கிறோம். கலெக்டரே தலையிட்டு உழவர்சந்தையை திறந்தும் பலனில்லை.
இவ்வாறு கூறினர்.
வேளாண்துறை வணிகம் மற்றும் விற்பனை பிரிவை சேர்ந்த அலுவலர்கள் கூறுகையில், 'காவேரிப்பட்டணம் உழவர் சந்தையை செயல்பட வைக்க நாங்கள் முயன்றோம். ஆனால், அங்கு என்ன பிரச்னை என்பதை யாரும் தெளிவாக கூறவில்லை. விவசாயிகளை நாங்களே அழைத்து வந்து, உழவர்சந்தையில் அமர வைத்து நடத்தினோம். இருப்பினும், அது தொடரவில்லை. அதனால், உழவர் சந்தையை மீண்டும் திறக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டோம். வேறு திட்டப்பணிகளுக்கு உழவர்சந்தை அமைந்துள்ள இடத்தை பயன்படுத்தி கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என்றனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, 14 ஆண்டுகள் ஆகியும் உழவர்சந்தை முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் உழவர்சந்தையிலிருந்து, 20 அடி துாரத்தில் சாலையோர காய்கறி கடைகள் கனஜோராக நடக்கிறது. இது குறித்து மாவட்ட, மாநில நிர்வாகம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.