/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகாவிற்கு 1 லட்சம் டன் கனிம வளங்கள் கடத்துவதாக புகார்; ஓசூரில் பெயரளவிற்கு அமைக்கப்பட்ட 11 சிறப்பு குழுக்கள்
/
கர்நாடகாவிற்கு 1 லட்சம் டன் கனிம வளங்கள் கடத்துவதாக புகார்; ஓசூரில் பெயரளவிற்கு அமைக்கப்பட்ட 11 சிறப்பு குழுக்கள்
கர்நாடகாவிற்கு 1 லட்சம் டன் கனிம வளங்கள் கடத்துவதாக புகார்; ஓசூரில் பெயரளவிற்கு அமைக்கப்பட்ட 11 சிறப்பு குழுக்கள்
கர்நாடகாவிற்கு 1 லட்சம் டன் கனிம வளங்கள் கடத்துவதாக புகார்; ஓசூரில் பெயரளவிற்கு அமைக்கப்பட்ட 11 சிறப்பு குழுக்கள்
ADDED : பிப் 05, 2025 07:31 AM
ஓசூர்: ஓசூர் வழியாக கர்நாடகாவிற்கு, தினமும் ஒரு லட்சம் டன் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, 11 சிறப்பு குழுவை அமைத்தார். ஆனால் இதுவரை, ஒரு குழு கூட, கடத்தல் லாரிகளை பறிமுதல் செய்யவில்லை.
கிருஷ்ணகிரி அடுத்த பாலேகுளி பெருமாள் கோவில், பட்டாளம்மன் கோவில், நாகமங்கலம் அருகே நீலகிரி அனுமந்தராய சுவாமி கோவில் ஆகியவற்றுக்கு சொந்தமான நிலங்களில், 198 கோடி ரூபாய் அளவிற்கு கனிம வளம் கொள்ளை நடந்திருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு ஒன்றில், கிருஷ்ணகிரி மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை சமீபத்தில் அறிக்கை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக துறை அமைச்சர் சேகர்பாபு, சம்பந்தப்பட்ட கோவில் நிலங்களில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், மாவட்டத்தில், 300க்கும் மேற்பட்ட குவாரிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளதாகவும், ட்ரோன் வாயிலாக சர்வே செய்தால், 30,000 கோடி ரூபாய்க்கு மேல், மக்களின் சொத்துக்கள் ஒரு சில தனிநபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டதும் வெளிச்சத்திற்கு வரும் என, கிருஷ்ணகிரி காங்., முன்னாள் எம்.பி., செல்லக்குமார், முதல்வர் ஸ்டாலினிடம் சமீபத்தில் மனு வழங்கினார்.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், மற்றொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 150 க்கும் மேற்பட்ட குவாரிகளில் இருந்து தினமும், 4,000 லாரிகளில், ஒரு லட்சம் டன் கனிம வளங்கள், அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு எடுத்து செல்லப்படுகின்றன. நவீன காலத்தில் கம்ப்யூட்டர் அனுமதி சீட்டு இல்லாமல், கையால் எழுதி வழங்குகின்றனர். அதை பலமுறை மாற்றி, கர்நாடகாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. கர்நாடகாவிற்கு கனிம வளங்கள் செல்வதாக, எந்த லாரிக்கும் அனுமதி சீட்டு வழங்கப்படுவதில்லை. உரிமம் இல்லாமல் கிரஷர்கள் செயல்படுகின்றன. மாவட்ட கலெக்டர், தாசில்தார் என்ன செய்கிறார்கள், என தெரியவில்லை,'' என்றார்.
இது குறித்து, தென்னிந்திய மோட்டார் சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், ஓசூரில் நிருபர்களிடம் கூறுகையில், 'அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்து செல்லலாம் என, மத்திய அரசின் விதிமுறையில் உள்ளது. அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படும் கனிமவளங்களுக்கு, 55 சதவீதம் பசுமை வரி செலுத்துகிறோம். போலி அனுமதி சீட்டு மூலமாக லாரிகளில் கனிம வளங்கள் கடத்துவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. அதனால் போலீசார், கனிமவளத்துறை அதிகாரிகள், லாரிகளை தடுத்து நிறுத்தி தொந்தரவு செய்யக்கூடாது' என்றனர்.
லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டை தொடர்ந்து, தமிழக எல்லையான ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி குவாரிகளில் இருந்து, அனுமதியின்றி கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகளை பறிமுதல் செய்ய, தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், ஆர்.ஐ., மற்றும் போலீசார் அடங்கிய, 11 சிறப்பு குழுக்களை, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா கடந்த மாதம், 30 ல் அமைத்தார்.
ஆனால் அக்குழுவினர், நேற்று முன்தினம் வரை எந்த லாரியையும் பறிமுதல் செய்யவில்லை. வழக்கமான பணிகளிலுள்ள ரெகுலர் தாசில்தார், தனி தாசில்தார்களtாக சிறப்பு குழுக்களில் இடம் பெற்றுள்ளனர். இதனால், அவர்கள் லாரிகளை பறிமுதல் செய்ய முக்கியத்துவம் கொடுக்காமல், தங்களது அன்றாட பணிகளை கவனிக்கின்றனர். அதனால், கர்நாடகாவிற்கு கனிம வளம் கடத்தப்படுவது தொடர்கிறது. அதுவும், ஓசூர் வழியாக அதிகளவில் நடப்பதாகவும், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும், பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஓசூர் சப் கலெக்டர் பிரியங்காவிடம் விளக்கம் கேட்க, அவரை தொடர்பு கொண்டபோது, மீட்டிங்கில் இருப்பதாக கூறி, குறுஞ்செய்தி அனுப்பினார்.