/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூருக்கு பதில் போச்சம்பள்ளியில் புது ஏர்போர்ட் அமைக்க பரிசீலனை
/
ஓசூருக்கு பதில் போச்சம்பள்ளியில் புது ஏர்போர்ட் அமைக்க பரிசீலனை
ஓசூருக்கு பதில் போச்சம்பள்ளியில் புது ஏர்போர்ட் அமைக்க பரிசீலனை
ஓசூருக்கு பதில் போச்சம்பள்ளியில் புது ஏர்போர்ட் அமைக்க பரிசீலனை
ADDED : ஆக 08, 2025 02:38 AM

ஓசூர்,:ஓசூர், சூளகிரியை தவிர்த்து, ஆந்திர எல்லைக்கு அருகே, பர்கூர் - போச்சம்பள்ளி தாலுகாவிற்கு இடையே புதிய விமான நிலையம் அமைக்க அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என, கடந்தாண்டு ஜூன் 27ல், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
கர்நாடகாவின் தேவனஹள்ளியிலுள்ள கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து, 150 கி.மீ., சுற்றளவிற்கு வேறு விமான நிலையம் அமைக்கக்கூடாது என, மத்திய அரசுடன் ஒப்பந்தம் உள்ளது.
ஓசூர், 75 கி.மீ., துாரத்திற்குள் உள்ளதால், பெங்களூரு விமான நிலையம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
ஓசூர் அருகே, பேலகொண்டப்பள்ளியில் விமான ஓடுதளத்துடன் உள்ள, 'தனுஜா ஏரோஸ்பேஸ் அண்டு ஏவியேஷன்' நிறுவனம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள், சூளகிரி அருகே உலகம் என இரு இடங்களை, விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு தேர்வு செய்து, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வழங்கியுள்ளது.
வான்வெளி பாதுகாப்பு அமைச்சகத்திடம், தனி வான் கட்டுப்பாட்டு மண்டலத்தை உருவாக்க தமிழக அரசு கேட்டுள்ளது. தேர்வு செய்துள்ள இரு இடங்களில் உள்ள சாதக, பாதங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதில், ஒரு இடத்தை அரசு இறுதி செய்தவுடன், நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கும் என, தகவல் வெளியானது.
இதற்கிடையே, தமிழக அரசு தேர்வு செய்துள்ள, தனுஜா ஏரோஸ்பேஸ் அண்டு ஏவியேஷன் நிறுவனத்தை ஒட்டிய பகுதிகள் விவசாய பூமியாக உள்ளன.
குடியிருப்புகளும் அதிகளவில் உள்ளன. ஏற்கனவே ஓசூரில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நிலையில், விமான நிலையமும் வந்தால், நெரிசல் மேலும் அதிகரிக்கும்.
உலகம் பகுதியில் தென்பெண்ணை ஆறு பாய்வதால், வளம் கொழிக்கும் விவசாய நிலங்கள் உள்ளன.
அங்கு, ஆண்டு முழுதும் கீரை, கொத்தமல்லி, புதினா உட்பட பல்வேறு வகையான காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதி நிலங்கள் மேடு, பள்ளம் நிறைந்ததாக உள்ளன. வளம் கொழிக்கும் நிலங்களை இழக்க விவசாயிகள் தயங்குவர்.
ஏற்கனவே, சிப்காட், பல்வேறு சாலை பணிகளுக்கு நிலத்தை இழந்துள்ள ஓசூர், சூளகிரி விவசாயிகள், விமான நிலையத்திற்கும் நிலம் கையகப்படுத்தினால் போராட்டத்தில் ஈடுபடுவர்.
இந்நிலையில், 150 கி.மீ., பிரச்னையும் உள்ளது. இதனால், 150 கி.மீ., துாரத்தை தாண்டி, பர்கூர் - போச்சம்பள்ளி தாலுகாவிற்கு இடையே, விமான நிலையத்தை கொண்டு செல்ல, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் தரப்பில், சில நாட்களுக்கு முன், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுடன் பேசப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி விமான நிலையம் அமைக்கப்பட்டால், திருவண்ணாமலை, தர்மபுரி மட்டுமின்றி, ஆந்திர மாநிலமும் பயன்பெறும் என, அமைச்சர் ராம்மோகனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், பரிசீலிப்பதாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.