ADDED : அக் 18, 2026 04:21 AM
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை சார்பில், புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி, 1 முதல் 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி, காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் நடந்தது.
காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜின்னா சாலையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவருட்பிரகாச வள்ளலார் பள்ளி உள்ளிட்ட பயிற்சி மையங்களில் நடந்த பயிற்சியில், துவக்கப்பள்ளி வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம், கற்பித்தல் முறை மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சவுந்தரராஜன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் பயிற்சி செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது, கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை சுவாரசியமாக அமைப்பது, மாணவர்களின் வயது மற்றும் கற்றல் நிலைக்கு ஏற்ப கற்பித்தல் முறைகளை பின்பற்றுவது குறித்து ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலகத்தில் நடந்த, வட்டார கல்வி அலுவலக பெயர் பலகை திறப்பு விழாவிலும் பங்கேற்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஜானகி, வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேசன், பெலிசிட்டா மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
