ADDED : ஜூலை 16, 2025 01:38 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, அங்கம்பட்டி, மேக்கலாம்பட்டி வழியாக மலையாண்டஹள்ளி, மடத்தானுார் செல்லும் சாலை உள்ளது. இதன் நடுவே, மேக்கலாம்பட்டி அருகில், போச்சம்பள்ளி, குள்ளனுார், கோணனுார் ஏரிகளிலிருந்து மேக்கலாம்பட்டி ஏரியிலிருந்து வரும் உபரிநீர் மற்றும் மழைநீர், மேக்கலாம்பட்டி ஏரி வழியாக இச்சாலையை கடந்து செல்லும். கடந்த, 2024, டிசம்பரில், 'பெஞ்சல்' புயலின்போது, போச்சம்பள்ளியில் பெய்த கன மழையின் போது, விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் புகுந்து, மேக்கலாம்பட்டி
பகுதியிலுள்ள சாலையை கடந்து சென்றது.
அப்போது சாலையை மழைநீர் அரித்துச் சென்றதில், 3 அடி ஆழத்திற்கு சாலையில் அரிப்பு ஏற்பட்டது. அதன்பின் அச்சாலை சீரமைக்கப்படாமல் தற்போது வரை, சாலையில் செல்வோருக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தி வருகிறது. இச்சாலை வழியாக நாள் ஒன்றுக்கு, சுற்று வட்டார பகுதியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் டூவீலரில் சென்று வருகின்றனர். மேலும், 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் குழந்தைகளுடன், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இச்சாலையை கடந்து செல்கிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கைக்கு, கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

