/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்வித்தரம் இருந்தும் வகுப்பறைகள் இல்லை வெட்டவெளியில் பாடம் கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்
/
கல்வித்தரம் இருந்தும் வகுப்பறைகள் இல்லை வெட்டவெளியில் பாடம் கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்
கல்வித்தரம் இருந்தும் வகுப்பறைகள் இல்லை வெட்டவெளியில் பாடம் கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்
கல்வித்தரம் இருந்தும் வகுப்பறைகள் இல்லை வெட்டவெளியில் பாடம் கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்
ADDED : டிச 24, 2024 01:44 AM
கிருஷ்ணகிரி, டிச. 24-
கிருஷ்ணகிரியில், வகுப்பறை
வசதியின்றி அரசு பள்ளி மாணவர்கள், வெட்டவெளியில் பாடம் கற்கும்
அவலநிலை உள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி பஞ்.,ல் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 610 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அதே வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையம் ஆகியவை செயல்படுகிறது. துவக்கப்பள்ளியில், 262 மாணவர்களும், மாற்றுத்திறன் பயிற்சி பள்ளியில், 25 மாணவர்களும் படிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி நகராட்சியை ஒட்டிய இப்பள்ளிகளில், கல்வித்தரம் சிறப்பாக உள்ளது. துவக்கப்பள்ளியில், 10 ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளியில், 3 பகுதிநேர ஆசிரியர்கள் உட்பட, 30 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மாற்றுத்திறன் மாணவர்கள் பயிற்சி மையத்தில், பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், 'டேப்லட்' வசதியுடன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேறு பள்ளிகளை தேடி
இத்தனை வசதிகள் இருந்தும், மாணவர்கள் கல்வி பயில, போதுமான இடவசதி இல்லை. துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி இரண்டில் ஒன்றிற்கு, இடம் ஒதுக்கக்கோரி பல முறை
பல்வேறு தரப்பினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இடவசதியின்றி பள்ளி மாணவர்கள் மரத்தடியிலும், வெட்டவெளியிலும் அமர்ந்து பாடம் கற்கும் அவல நிலை உள்ளது.
காலை சிற்றுண்டி உணவு, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சலுகைகள் என்ற அரசு அறிவிப்பு மற்றும் கல்வித்தரம் சிறப்பாக இருக்கும் நிலையில், அரசு பள்ளிகளை தேடி வரும் மாணவர்களுக்கு, இடவசதி இல்லாததால், வேறு பள்ளிகளை தேடிச்செல்லும் அவலநிலை உள்ளது.
ஆசிரியர்கள் வேதனை
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'கொரோனா தாக்கத்திற்கு பின், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை இருமடங்கானது. ஆனால், போதுமான வகுப்பறைகள் இல்லை. உயர்நிலைப் பள்ளிக்கு மட்டும், 6 வகுப்பறை தேவைப்பட்டது. இதையடுத்து தேவசமுத்திரம் ஏரியை ஒட்டி சுடுகாட்டுக்கு அருகில், புதியவசதி வாரிய குடியிருப்புக்கு சொந்தமான இடத்தில், பள்ளி கட்டடம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டும், பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. மாணவ, மாணவியருக்கு கழிப்பிட வசதி கூட முறையாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு, கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தனி இடம் ஒதுக்கினால், அந்த வளாகத்தில் இயங்கும் துவக்கப் பள்ளியில் மேலும் பலர் கல்வி பயில்வர். உயர்நிலைப் பள்ளியில், 750 மாணவர்கள் பயின்ற நிலையில், இடவசதி காரணமாக பலருக்கு டி.சி., கொடுக்கப்பட்டு தற்போது, 610 பேர் மட்டுமே படிக்கின்றனர். இதே பள்ளி வளாகம் அருகிலுள்ள விளையாட்டு மைதானம், பூங்கா அருகில், புதிய பள்ளி கட்டடங்கள் கட்டினால் கூட, பள்ளி மாணவர்களுக்கான வகுப்பறை கிடைக்கும்' என்றனர்.
10 ஆண்டு கோரிக்கை
நேற்று தமிழகத்தில், 21 மாவட்டங்களிலுள்ள, 195 பள்ளிகளில், 120.55 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, 400 புதிய, கூடுதல் வகுப்பறை கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். இதில், கடந்த, 10 ஆண்டுகளாக துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிக்கு தனி இடம், கூடுதல் வகுப்பறைகள் கேட்டு வரும், கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளி துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி இல்லை என, அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர்.