ADDED : செப் 13, 2024 07:04 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஏரி நீர் முற்றிலும் மாசடைந்து வருவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில், சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் அமைந்துள்ளது தேவசமுத்திரம் ஏரி. அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீர் ஆதாரமாக விளங்கி வந்தது. கடந்த, 10 ஆண்டுக்கும் மேலாக கிருஷ்ணகிரி நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும், ஏரியில் நேரடியாக கலந்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்கள் வளர்ப்பதும், விவசாயம் செய்வதும் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்வோர், அதில் சேகரிக்கும் மனித கழிவுகளை நகருக்கு வெளியில் சென்று அகற்றாமல், இந்த ஏரியில் நேரடியாக கொட்டி வருகின்றனர். இதனால், இந்த ஏரி நீர் முற்றிலும் மாசடைந்து, யாருக்கும் பயனற்றதாக மாறியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால், இந்த ஏரி முழுவதும் ஆகாய தாமரைகள் வளர்ந்து, ஏரி நீர் முழுவதும் மாசடைந்துள்ளது. இந்த ஏரியில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்றி, ஏரியில் மனிதக்கழிவுகளை கொட்ட தடை விதித்து, கழிவுநீர் ஏரியில் நேரடியாக கலப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.