/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மத்திய அரசின் திட்டங்களில் தி.மு.க., ஸ்டிக்கர்'
/
'மத்திய அரசின் திட்டங்களில் தி.மு.க., ஸ்டிக்கர்'
ADDED : ஏப் 18, 2024 07:07 AM
கிருஷ்ணகிரி : ''மத்திய அரசின் திட்டங்களுக்கு, ஸ்டிக்கர் ஓட்டும் பணியை மட்டுமே, தி.மு.க., அரசு செய்து வருகிறது,'' என, கிருஷ்ணகிரி, பா.ஜ., வேட்பாளர் நரசிம்மன் பேசினார்.
தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று, கிருஷ்ணகிரி நகரின், பழைய பேட்டை, காந்திரோடு, பெங்களூரு ரோடு, மீன் மார்க்கெட், எஸ்.ஐ.சி., அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில், பா.ஜ., வேட்பாளர் நரசிம்மன் பிரசாரம் மேற்கொண்டார்,.
அப்போது, அவர் பேசியதாவது: நடக்கவுள்ளது லோக்சபா தேர்தல் என்பதையும், நமக்கான பிரதமரை தேர்ந்தெடுக்கவுள்ளோம் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும். சுதந்திரம் பெற்றதிலிருந்து நாட்டை பின்னோக்கி தள்ளிய, காங்., ஆட்சி வேண்டுமா, அல்லது பிரதமர் மோடியின் கடந்த, 10 ஆண்டு கால சாதனைய ஆட்சி தொடர வேண்டுமா, என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல். இவர்களுடன், காங்., கூட்டணி வைத்து, 'இண்டியா' கூட்டணியை வேறு உருவாக்கியுள்ளது. இவர்கள் கூட்டணியால் எப்படி நல்லாட்சி கொடுக்க முடியும். தமிழகத்தில் பரவியுள்ள போதை கலாசாரம் மட்டும் தான் இந்தியா முழுவதும் பரவும்.
கடந்த, 10 ஆண்டு கால, பா.ஜ., ஆட்சியில் செய்த திட்டங்களை மட்டும் பாருங்கள். இலவச காஸ், ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுகள் தோறும் குடிநீர், இலவச ரேஷன் பொருட்கள் என திட்டங்களை வாரி வாரி கொடுத்துள்ளது மத்திய, பா.ஜ., அரசு. தமிழகத்தில் மட்டும், 31,914 பிரதமர் வீடு கட்டப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் கொடுத்தவர் பிரதமர் மோடி. இதுதவிர மாநில அரசின் திட்டங்களிலும், மத்திய அரசின் நிதி உள்ளது.
அதற்கு ஸ்டிக்கர் ஓட்டும் பணியை மட்டுமே, தி.மு.க., அரசு செய்து வருகிறது. அவர்களுக்கு தங்கள் குடும்ப வளர்ச்சியே முக்கியம். பா.ஜ.,வுக்கு தேச நலனே முக்கியம். எனவே, ஊழலில் திளைக்கும் தி.மு.க., கூட்டணியை புறக்கணித்து, பா.ஜ.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட, ஓ.பி.எஸ்., அணி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பா.ம.க., மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

