ADDED : மே 16, 2025 01:18 AM
கிருஷ்ணகிரி, பர்கூர், முருக்கம்பள்ளம் கிராமத்திலுள்ள திரவுபதி அம்மன் கோவிலில், 51ம் ஆண்டு மகாபாரத விழா கடந்த, 2ல் துவங்கியது. தொடர்ந்து, 18 நாட்கள், மகாபாரத சொற்பொழிவாளர் கோவிந்தராஜ் பாகவதர், கவிப்பாடகர் ராமன் ஆகியோரால் மகாபாரத சொற்பொழிவும், கடந்த, 7 முதல், 13 நாட்கள் தினமும் இரவில், மலையூர் ராமர் நாடக கலைக்குழுவினரின் தெருக்கூத்து நாடகமும் நடந்து வருகிறது. இதில், கிருஷ்ணன் பிறப்பு நாடகம், அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, அரக்கு மாளிகை, வில் வளைப்பு ஆகிய நாடகங்கள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, பாஞ்சாலி அம்மனுக்கும், பாண்டு மன்னர் வில் விஜயனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக திருக்கல்யாணத்திற்கு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை, முருகம்பள்ளம், பாலேப்பள்ளி, எலத்தகிரி, மாதன குப்பம், வெண்ணம்பள்ளி, ஜோடு கொத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து, திருக்கல்யாணத்திற்கு மொய் மற்றும் பட்டு புடவைகளை வழங்கினார்.
விழா ஏற்பாடுகள், 8 கிராமங்களை சேர்ந்த தர்மகர்த்தாக்கள் செய்துள்ளனர். தொடர்ந்து, சுபத்திரை கல்யாணம், காண்டவன தகனம், சராசந்திரன் சண்டை, துயில், சித்திரசேனன் சண்டை, அரவான் சாபம், அர்சுனன் தபசு, துரியோதனன் படுகளம், பாஞ்சாலி சபதம் முடித்தல் ஆகிய இதிகாச நாடகங்கள் நடக்க உள்ளன.