/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஏக்கல்நத்தம் மலை கிராம மாணவர் களப்பயணம்
/
ஏக்கல்நத்தம் மலை கிராம மாணவர் களப்பயணம்
ADDED : டிச 09, 2024 07:37 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, சிந்து சமவெளி நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், ஏக்கல்நத்தம் மலை கிராம மாணவர்கள், ஒரு நாள் களப்பயணம் சென்றனர்.
முதலில், 6ம் வகுப்பில் வரும் சமணமும், பவுத்தமும் பாடத்தில் கூறப்பட்ட தீர்த்தங்கள் பற்றி அறிய, கிருஷ்ணகிரியில் உள்ள பத்மாவதி கோவிலுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று, சமணம் பற்றி கூறப்பட்டது. பின், கி.பி., 1058ம் ஆண்டு, 2ம் ராஜேந்திர சோழரின் கல்வெட்டுகளை கொண்ட பழையபேட்டை சோமேஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள் மற்றும் கோவில் கட்டடக்கலை பற்றியும் மாணவர்களுக்கு, அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் விளக்கினார்.
அருங்காட்சியகத்தில், கற்கருவிகள், பாறை ஓவியங்கள், சங்ககால பானைகள், கல்திட்டை, நடுகல், வீரக்கல், சதிக்கல், கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓலைச்சுவடி ஆவணங்கள், போர் கருவிகளான பீரங்கி, துப்பாக்கி, போர் வாள்கள் பற்றி, காப்பாட்சியர் எடுத்துரைத்தார். பின், மாவட்ட மைய நுாலகம் சென்ற மாணவர்கள், நுாலகத்தின் செயல்பாடுகள் பற்றி அறிந்தனர். கிருஷ்ணகிரியின் பழமையான ரோம் நகரின் கட்டடக்கலையில் உருவாக்கப்பட்ட புனித பாத்திமா அன்னை ஆலயம் சென்று கண்டு களித்தனர். மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.இதில், ஏக்கல்நத்தம் வார்டு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், ஹென்றிபவுல் உள்பட பலர் உடனிருந்தனர்.