/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
7 ஆண்டாக யானைகள் அட்டகாசம்: சோலார் மின்வேலி கேட்டு தர்ணா
/
7 ஆண்டாக யானைகள் அட்டகாசம்: சோலார் மின்வேலி கேட்டு தர்ணா
7 ஆண்டாக யானைகள் அட்டகாசம்: சோலார் மின்வேலி கேட்டு தர்ணா
7 ஆண்டாக யானைகள் அட்டகாசம்: சோலார் மின்வேலி கேட்டு தர்ணா
ADDED : ஜூன் 10, 2025 01:46 AM
கிருஷ்ணகிரி, யானைகள் அட்டகாசத்தை தடுக்க, சோலார் மின்வேலி கேட்டு வந்த, 300க்கும் மேற்பட்டோரை, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால், அவர்கள், 2 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மேகலசின்னம்பள்ளி, வேப்பனஹள்ளி சுற்றுவட்டாரத்தில் கடந்த, 7 ஆண்டுகளாக யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. விவசாயம் பாதித்து, உயிர்
பலியும் அதிகரித்துள்ளது. அப்பகுதிகளில் சோலார் மின்வேலி அமைக்கக்கோரி, மகாராஜகடை, குருவினநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, வரட்டனப்பள்ளி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, 300க்கும் மேற்பட்டோர் நேற்று, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க நேற்று வந்தனர். அவர்களை தடுத்த போலீசார், 50 பேர் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, 'விவசாய நிலங்களில் யானைகள் அட்டகாசம் செய்வதோடு, சாலைகளிலும் சுற்றி வருகிறது. இதனால் விவசாயிகள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், யானைகளோடு வாழ பழக கூறுகின்றனர். யானைகள் இருக்கும் இடம் குறித்து கூறினாலும், வனத்துறையினர் வருவதில்லை' எனக்கூறி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி., சங்கர், டி.எஸ்.பி., முரளி, இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், செந்தில்குமார், கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். காலை, 11:30 மணிக்கு துவங்கிய தர்ணா போராட்டம், 1:30 மணி வரை நீடித்தது. அதன்பின், சரவணன், முருகேசன், சிவசங்கர், வேலன் அடங்கிய, 50 பேர் மட்டும், கலெக்டரை சந்தித்து பிரச்னை குறித்து அவரிடம் விவரித்தனர்.
அப்போது, 'கடந்த, 7 ஆண்டுகளாக யானை தொந்தரவு உள்ளது. கடந்த கொரோனா காலத்தில், யானைகள் ஆந்திர வனப்பகுதி வழியாக, மகாராஜகடை வனப்பகுதிகளுக்குள் நுழைந்தன. பின், அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தால் விவசாயம் செய்ய முடியவில்லை. யானை தாக்கி ஏற்படும் உயிர் பலிக்கு, இன்றளவும் நடவடிக்கை இல்லை. யானை தாக்கி படுகாயமடைந்தால், பல லட்சம் ரூபாய் செலவாகிறது. அரசு தரும், 50,000 ரூபாய் போதவில்லை. யானைகளை விரட்டினால் மட்டும் போதாது. அவை மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்' என்றனர்.
அவர்களிடம் பேசிய கலெக்டர் தினேஷ்குமார், இது குறித்து ஆய்வு செய்ய, வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வருகிறேன். யானை வரும் வழிகள் குறித்து ஆய்வு செய்யலாம். உடனடியாக, வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுவர். தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனப்பகுதியையொட்டி அமைத்த இரும்பு கம்பிவேலி போல அங்கும் அமைத்து கொடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார்.
இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.