/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்பெண்ணையாற்றில் வெள்ளமாக உபரி நீர் ; வறண்ட மருதாண்டப்பள்ளி, துரை ஏரி, சின்னாறு அணை
/
தென்பெண்ணையாற்றில் வெள்ளமாக உபரி நீர் ; வறண்ட மருதாண்டப்பள்ளி, துரை ஏரி, சின்னாறு அணை
தென்பெண்ணையாற்றில் வெள்ளமாக உபரி நீர் ; வறண்ட மருதாண்டப்பள்ளி, துரை ஏரி, சின்னாறு அணை
தென்பெண்ணையாற்றில் வெள்ளமாக உபரி நீர் ; வறண்ட மருதாண்டப்பள்ளி, துரை ஏரி, சின்னாறு அணை
ADDED : நவ 13, 2024 07:45 AM
ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர், தென்பெண்ணையாற்றில் வெள்ளமாக சென்ற நிலையிலும், மருதாண்டப்பள்ளி ஏரி, சூளகிரி துரை ஏரி மற்றும் சின்னாறு அணை நீரின்றி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள கெலவரப்பள்ளி அணையிலிருந்து, முதல்போக பாசனத்திற்கு கடந்த ஜூலை, 10 ல், வலது, இடது கால்வாயில், 88 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம், 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இடதுபுற கால்வாயை நம்பியுள்ள மருதாண்டப்பள்ளி ஏரிக்கு இந்தாண்டு உபரி நீர் வரும் என்றும், அதன் மூலம் ஏரி நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், மாவட்ட கலெக்டரிடம் இருந்து அனுமதி கிடைக்காததால், மருதாண்டப்பள்ளி ஏரிக்கு இடது கால்வாயில் இருந்து தண்ணீர் திருப்பி விடப்படவில்லை.
நிரம்பாத ஏரி
கெலவரப்பள்ளி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையால் நீர்வரத்து அதிகமாக இருந்தது. தென்பெண்ணையாற்றில் அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்த நேரத்தில் கூட, கெலவரப்பள்ளி அணையிலிருந்து இடது கால்வாய் மூலம், மருதாண்டப்பள்ளி ஏரிக்கு உபரி நீர் திறக்கப்படவில்லை. இதனால், 2 ஆண்டுக்கும் மேலாக மருதாண்டப்பள்ளி ஏரி நிரம்பாததுடன், அதை நம்பியுள்ள துரை ஏரியும் நிரம்பாமல் உள்ளது.
விவசாயிகள் பாதிப்பு
துரை ஏரி நிரம்பி உபரி நீர் சென்றால், அதன் மூலம் சின்னாறு அணை நிரம்பும். ஆனால், துரை ஏரியில் நீர் இல்லாததால், சின்னாறு அணைக்கு சுத்தமாக நீர்வரத்து இல்லாமல் போனது. கடந்த, 4 ஆண்டுகளாக துரை ஏரியும், 2 ஆண்டுகளாக சின்னாறு அணையும் நிரப்பவில்லை. நேற்றைய நிலவரப்படி சின்னாறு அணையின் முழு கொள்ளளவான, 32.80 அடியில், 17.03 அடிக்கு மட்டுமே நீர் உள்ளது.
குட்டை போல் சின்னாறு அணை மாறியுள்ளதால், அதை நம்பியுள்ள, 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நீர்வளத்துறையிடம் விவசாயிகள் தண்ணீர் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், மாவட்ட கலெக்டர் மனது வைத்தால் மட்டுமே, மருதாண்டப்பள்ளி ஏரிக்கு கெலவரப்பள்ளி அணையிலிருந்து உபரிநீர் திறக்க முடியும் என்ற நிலை உள்ளது. மருதாண்டப்பள்ளி, துரை ஏரியில் நீர் இல்லாததால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
யார் தவறு
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயுவிடம் பேசியபோது, அவர், தனது நேர்முக எழுத்தர் வீராசாமி மூலமாக பதிலளித்தார். அவர், நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பேசி விட்டு கூறுகையில், ''இடதுபுற கால்வாயில், தற்போது பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. இன்னும், 2 வாரத்தில் ஏரிக்கு தண்ணீர் விடப்படும்'' என்றார். ஆனால் கடந்த, 4 ஆண்டுகளாக துரை ஏரியும், 2 ஆண்டுகளாக மருதாண்டப்பள்ளி ஏரியும் நிறையவில்லை. அப்படியென்றால் இந்தாண்டு மட்டுமின்றி, கடந்த, 2 ஆண்டுகளாக ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கவில்லை. இது யார் செய்த தவறு என்ற கேள்வியை, விவசாயிகள் எழுப்பி உள்ளனர்.