/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாயிகள் சங்கம் வீடு கட்டும் போராட்டம்
/
விவசாயிகள் சங்கம் வீடு கட்டும் போராட்டம்
ADDED : மே 01, 2025 01:13 AM
அஞ்செட்டி:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையம் பஞ்., உட்பட்ட செங்கொடிபுரம் கிராமத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த, 1999ம் ஆண்டு, 29 ஏழை குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால், நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்கவில்லை. இதனால் பல்வேறு கட்ட போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஈடுபட்டது. அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அஞ்செட்டி வருவாய்த்துறை அதிகாரிகள், விரைவில் நிலத்தை அளவீடு செய்து தருவதாகவும், அத்திமரத்துார், சித்தாண்டபுரம், பூஞ்சோலை, காமராஜபுரம், பையில்காடு, ஆண்டியூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு பட்டா வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், செங்கொடிபுரம் கிராமத்தில் நேற்று வீடு கட்டும் போராட்டம் நடந்தது. வட்ட செயலாளர் குமாரவடிவேல் தலைமை வகித்தார். தலைவர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ், அடிமனை பணியாளர்கள் சங்க, மாவட்ட செயலாளர் அனுமப்பா கண்டன உரையாற்றினர்.
அஞ்செட்டி தாசில்தார் கோகுல்நாத், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ் பேச்சுவார்த்தை நடத்தி, நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் போராட்டம்
முடிவுக்கு வந்தது.