/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'சிண்டிகேட்'டால் மா விலை குறைப்பை தடுக்கமுத்தரப்பு கூட்டத்துக்கு விவசாயிகள் கோரிக்கை
/
'சிண்டிகேட்'டால் மா விலை குறைப்பை தடுக்கமுத்தரப்பு கூட்டத்துக்கு விவசாயிகள் கோரிக்கை
'சிண்டிகேட்'டால் மா விலை குறைப்பை தடுக்கமுத்தரப்பு கூட்டத்துக்கு விவசாயிகள் கோரிக்கை
'சிண்டிகேட்'டால் மா விலை குறைப்பை தடுக்கமுத்தரப்பு கூட்டத்துக்கு விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஏப் 23, 2025 01:23 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'சிண்டிகேட்' போட்டு விலையை குறைப்பதை தடுக்க, முத்தரப்பு கூட்டம் நடத்த அரசுக்கு மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி , காவேரிப்பட்டணம், சூளகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் சுற்றுவட்டாரத்தில், 30க்கும் மேற்பட்ட மா ரகங்கள், 40,000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஏப்., 2வது வாரத்தில் துவங்கும் மா சீசன் மே, ஜூன் மாதத்தில் வரத்து அதிகரிக்கும். கடந்தாண்டு மழை குறைவு, பூச்சிகள் கட்டுப்படுத்த முடியாமல், மா விளைச்சல் சரிவை சந்தித்த்து. நடப்பாண்டில் போதுமான மழை பொழிந்துள்ள நிலையில், சீசன் துவங்கிய போதும், கடந்தாண்டை விட, 10 சதவீத காய்ப்பு மட்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அவற்றிற்கு முறையான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டுமெனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, மா விவசாயிகள் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பாண்டில் போதிய மழை இருந்தும், மா பிஞ்சாக இருந்தபோது வழக்கமாக பெய்யும் மழை இல்லை. தற்போது பெய்யும் கோடை மழையால் மரத்திலுள்ள பிஞ்சுகள் மட்டுமே ஊட்டம் பெறுமே தவிர, புதிய பிஞ்சுகள் வர வாய்ப்பில்லை. கடந்தாண்டை விட, 10 முதல் 15 சதவீதம் மா விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும் மாங்காய்க்கு போதிய விலை இல்லை எனக்கூறி, மா வியாபாரிகள் தங்களுக்குள் 'சிண்டிகேட்' அமைத்து மா வகைகளை குறைந்த அளவிலேயே தற்போதும் விலைக்கு கேட்கின்றனர். இதை தடுக்க அரசு அதிகாரிகள், மா விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். கடந்தாண்டாவது ஒரு முறை முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது அதை பற்றி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
மா விவசாயிகளுக்கு, ரகங்களுக்கு ஏற்றாற் போல் விலை நிர்ணயித்து, டன்னுக்கு, 50,000 ரூபாய் வரை வழங்க வேண்டும். வாரந்தோறும், முத்தரப்பு கூட்டம் நடத்தி, மா விலையை நிர்ணயிக்க வேண்டும். மேலும், ஆந்திராவில் மாங்காய் டன்னுக்கு, 25,000 ரூபாய் என நிர்ணயித்துள்ளனர். அதற்கு மேல் விற்றால் விவசாயிக்கு லாபம். ஆனால் குறைவான விலைக்கு விற்றால், ஏற்படும் இழப்பை அரசே கொடுக்கிறது. அதேபோல தமிழகத்திலும் மாங்காய்க்கு விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் பட்சத்தில் அந்த தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

