/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கருகும் பயிரால் விவசாயிகள் வேதனை
/
கருகும் பயிரால் விவசாயிகள் வேதனை
ADDED : ஜன 29, 2024 11:09 AM
ஓசூர்; ஓசூர் தாலுகா, பாகலுார் அருகே லிங்காபுரத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் ஆழ்துளை கிணற்றில் கிடைக்கும் நீரை வைத்து, கீரை, கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
கடந்த, 4 மாதங்களுக்கு முன், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வசதியாக, விவசாயிகள் தங்களது சொந்த பணத்தை கட்டி, மின்வாரிய உதவியுடன் விவசாய நிலத்தில் டிரான்ஸ்பார்மர் அமைத்தனர். இதன் மூலம், 25க்கும்
மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டது.
இந்நிலையில், லிங்காபுரம் பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்கு, விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரில் இருந்து, மின்வாரிய அதிகாரிகள் சமீபத்தில் மின் இணைப்பு வழங்கினர். அதனால், விவசாய நிலங்களிலுள்ள மோட்டாரை ஆன் செய்தவுடன், குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டது.
இது தொடர்பாக, மின்வாரிய அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், இரு மாதங்களுக்கு மேலாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடைந்தனர். விவசாய பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. கடந்த, 15 நாட்களுக்கு முன் டிரான்ஸ்பார்மரை கழற்றி சென்ற அதிகாரிகள், விவசாயிகள் மின்சாரத்தை பயன்படுத்த மாற்று ஏற்பாட்டை செய்யவில்லை. அதனால், கொத்தமல்லி, கேரட் உள்ளிட்ட பயிர்கள் நீரின்றி கருகுவதால், விவசாயிகள்
கவலையில் உள்ளனர்.