/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மகனை அடித்து கொன்ற தந்தைக்கு 10 ஆண்டு சிறை
/
மகனை அடித்து கொன்ற தந்தைக்கு 10 ஆண்டு சிறை
ADDED : நவ 27, 2024 06:49 AM
ஓசூர்: சூளகிரி அருகே, மகனை அடித்து கொன்ற தந்தைக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, ஓசூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே குருபசப்படியை சேர்ந்தவர் மீசைக்கார எல்லப்பா, 67. இவருக்கு, 2 மகன்கள், 2 மகள்கள். மூத்த மகன் சுப்பிரமணி, 30. இளைய மகன் பழனி. இவரை தவிர அனைவருக்கும் திருமணாகி விட்டது. ஒன்றரை ஏக்கர் பூர்வீக நிலைத்தை பிரித்து தரக்கேட்டு தந்தை எல்லப்பாவிடம், மகன் சுப்பிரமணி அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்து வந்தார். கடந்த, 2013ல் தகராறு செய்தபோது, தந்தைக்கு சாதகமாக பேசிய தம்பி பழனியை, கத்தியால் குத்தியுள்ளார்.
அச்சமடைந்த எல்லப்பா, தன் மகள்கள் வீட்டில் தங்கினார். கடந்த, 2014 ஜன., 14 ல் தன் இரு காளை மாடுகளை மேய்த்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மகன் சுப்பிரமணி, காளை மாட்டை கேட்டு தகராறு செய்தார். எல்லப்பா, ஆத்திரத்தில் கட்டையால் அடித்ததில் மயக்கமடைந்த சுப்பிரமணி, மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு இறந்தார். சூளகிரி போலீசார், எல்லப்பாவை கைது செய்தனர்.
ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சந்தோஷ், குற்றம் சாட்டப்பட்ட எல்லப்பாவிற்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால், மேலும், 3 மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சின்னபில்லப்பா ஆஜராகினார்.