/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறுத்தை கடித்த ஆட்டுடன் போராட்டம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை
/
சிறுத்தை கடித்த ஆட்டுடன் போராட்டம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை
சிறுத்தை கடித்த ஆட்டுடன் போராட்டம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை
சிறுத்தை கடித்த ஆட்டுடன் போராட்டம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை
ADDED : டிச 25, 2024 01:53 AM
சிறுத்தை கடித்த ஆட்டுடன் போராட்டம்
வனத்துறையினர் பேச்சுவார்த்தை
ஓசூர், டிச. 25-
தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை பஞ்., உட்பட்ட சனத்குமார் நதிக்கரையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. குறிப்பாக, இஸ்லாம்பூர் அருகே உள்ள தனியார் ரிசார்ட் மற்றும் லே அவுட் குடியிருப்பை சுற்றியுள்ள வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை, அவ்வப்போது மேய்ச்சலுக்கு செல்லும்
விவசாயிகளின் ஆடுகளை கொன்று வருகிறது.
மேலும், அப்பகுதியில் உள்ள வீடு மற்றும் தெரு நாய்களை கவ்வி சென்று விடுகிறது. இதனால், தண்டரை, இஸ்லாம்பூர், அடவிசாமிபுரம் உட்பட பல்வேறு கிராம மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். தனியார் லே அவுட் பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ள போதும், ஓராண்டிற்கு மேலாக சிறுத்தை பிடிபடவில்லை. அதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரம் காட்டவில்லை. இதுவரை கிட்டத்தட்ட, 15 க்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளதாக, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சில ஆடுகள் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே அடவிசாமி
புரத்தை சேர்ந்த விவசாயி தேவராஜ், 55, என்பவர், 70க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று, நேற்று முன்தினம் மாலையில் திரும்பி வரும் போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை, ஒரு ஆட்டை கடித்து குதறியது. தேவராஜ் சத்தம் போட்டதால், சிறுத்தை ஆட்டை போட்டு விட்டு தப்பியது. படுகாயமடைந்த ஆட்டை மீட்ட விவசாயி தேவராஜ், வீட்டில் வைத்து சிகிச்சையளித்தார்.
தேவராஜின் மகன் நவீன்குமார், 26, படுகாயமடைந்த ஆட்டை ரத்தம், சொட்ட, சொட்ட தோள் மீது போட்டு கொண்டு, தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகத்திற்கு நேற்று சென்று வாசலில் ஆட்டுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த வனத்துறையினரிடம், சிறுத்தையை பிடிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என கூறி வாக்குவாதம் செய்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் கூறிய நிலையில், நீண்ட நேரத்திற்கு பின் ஆட்டுடன் நவீன்குமார் அங்கிருந்து
சென்றார்.

