/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொளுத்தும் வெயிலால் உதிரும் பிஞ்சுகள்: மா விவசாயிகள் வேதனை
/
கொளுத்தும் வெயிலால் உதிரும் பிஞ்சுகள்: மா விவசாயிகள் வேதனை
கொளுத்தும் வெயிலால் உதிரும் பிஞ்சுகள்: மா விவசாயிகள் வேதனை
கொளுத்தும் வெயிலால் உதிரும் பிஞ்சுகள்: மா விவசாயிகள் வேதனை
ADDED : ஏப் 19, 2024 06:51 AM
போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 50,000 ஹெக்டேர் பரப்பளவில், 'மா' சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, 5 ஆண்டுகளாக மாவில் பூச்சி தாக்குதலால், மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் மா மரங்களில் பூக்கள் பூக்க தொடங்கும். இந்தாண்டு, 60 சதவீதம் மா மரங்களில், பூ பூக்காமல் இருந்ததால், விவசாயிகள் விரக்தியில் இருந்தனர். மீதமுள்ள, 40 சதவீத மா மரங்களில் பூ பூத்து பிஞ்சு வைத்து, காய்கள் காய்த்துள்ள நிலையில், தற்போது மழையின்றி கடும் வெயில் தாக்கத்தால், மரங்களில் உள்ள பிஞ்சுகள் வெதும்பி விழுகின்றன. மரங்களிலுள்ள காய்கள் வெயிலினால் வெதும்பி முதிர்வு பெறாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டம் அடைவதாக, வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தட்ரஹள்ளியை சேர்ந்த, மா விவசாயி சிவகுரு கூறுகையில், ''மழையின்றி கடும் வெயிலின் தாக்கத்தால், 60 சதவீத மரங்கள் பூ பூக்காமல் உள்ளன. மீதமுள்ள, 40 சதவீத மா மரங்களில் உள்ள மா பிஞ்சுகள் தொடர்ந்து வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தால், உதிர்ந்து வருவது வேதனை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம், நீர் மேலாண்மை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதே, மா மரங்கள் காய்வதற்கு காரணம். இனி மேலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., டேமில் இருந்து மழைக் காலங்களில் வெளியேறும் உபரி நீரை, பாளேகுளி ஏரியிலிருந்து, 27 ஏரிகளுக்கு அமைக்கப் பட்டுள்ள வாய்க்கால்கள் மூலம், அனைத்து ஏரிகளிலும் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இந்தாண்டு பாதிக்கப்பட்டுள்ள, 'மா' விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

