ADDED : அக் 11, 2026 02:14 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் அனைத்து டீக்கடைகள், கபே, உணவகங்கள், சாலையோர கடைகள் மற்றும் உணவு விற்பனை நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களில் உருவாகும் குப்பையை, மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து வழங்க வேண்டியது கட்டாயமாகும். எனவே, அனைத்து நிறுவனங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், சாலையோரங்களில் செயல்படும் அனைத்து டீக்கடைகள், மற்றும் உணவகங்கள், தங்களது கடைகளின் முன்புறத்தில், பொதுமக்கள், துாய்மை பணியாளர்களுக்கு எளிதில் தெரியும்படி, பச்சை நிற தொட்டியில் மக்கும் குப்பையையும், நீல நிற தொட்டியில் மக்காத குப்பையையும், சேகரித்து வைப்பது கட்டாயமாகும். இத்தொட்டிகளில் சேகரிக்கப்படும் குப்பை, ஒன்றுடன் ஒன்று கலக்காத வகையில் பராமரிக்க வேண்டும். மாநகராட்சியின் இந்த அறிவுறுத்தலை பின்பற்றாத மற்றும் குப்பையை தரம் பிரிக்காமல் வழங்கும் நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மீது, மாநகராட்சி விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும். மேலும், தரம் பிரிக்கப்படாத குப்பை, ஓசூர் மாநகராட்சியால் சேகரிக்கப்படாது. இதுதொடர்பாக, மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியின் இந்த அறிவுறுத்தலை கட்டாயம் பின்பற்றி, நகரின் துாய்மையை பாதுகாக்க, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். துாய்மையான ஓசூர் மாநகரத்தை உருவாக்குவது அனைவரின் பொறுப்பாகும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
