/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
/
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : அக் 17, 2024 01:11 AM
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு
2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி, அக். 17-
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரித்துள்ளதால், 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் நீர்திறப்பால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 8:00 மணிக்கு அணைக்கு வினாடிக்கு, 1,714 கன அடியாக இருந்த நீர்வரத்து, பகல், 12:00 மணிக்கு, 3,428 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.40 அடியாக நீர்மட்டம் இருந்ததால், அணையிலிருந்து, 2,680 கன அடி நீர், 3 சிறிய மதகுகள் மூலம் ஆற்றில் திறக்கப்பட்டது. தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் இருபகுதிகளிலும் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, மாவட்ட கலெக்டர் சரயு அணையை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தென்பெண்ணையாறு ஓடும் பகுதிகளான காவேரிப்பட்டணம், பெண்ணெஸ்வரமடம், நெடுங்கல் உட்பட கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வருவாய்த்துறையினர் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் வரை, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததால், மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை முதல், லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்தங்கரையில், 73 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், கெலவரப்பள்ளி அணை, 60, நெடுங்கல், 41.40, ஓசூர், 38.60, பெணுகொண்டாபுரம், 36, கிருஷ்ணகிரி, தளி, சூளகிரியில் தலா, 35, கே.ஆர்.பி., அணை, 31.60, தேன்கனிக்கோட்டை, 31, சின்னாறு அணை, போச்சம்பள்ளியில் தலா, 25, பாம்பாறு அணை, 28, ராயக்கோட்டை, 21, பாரூர், 20.20, அஞ்செட்டி, 12.80 என மொத்தம், 548.20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.