/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
/
3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : அக் 11, 2025 12:30 AM
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து, 4,249 கன அடியாக அதிகரித்துள்ளதால், 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 9 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து கடந்த, 8 முதல், தென்பெண்ணை ஆற்றில் தினமும், 1,202 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளதாலும், மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம், 1,348 கன அடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று காலை, 6:00 மணிக்கு, 2,209 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 50.55 அடியாக இருந்தது. காலை, 10:00 மணிக்கு, 4,249 கன அடியாக நீர்வரத்து அதிகரித்ததால், பிரதான 3 ஷட்டர்கள் மற்றும், 3 சிறிய மதகுகளின் மூலம், 4,249 கன அடிநீரும் திறக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலம் மூழ்கியபடி தண்ணீர் செல்வதால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அணை பகுதிக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில், தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என, நீர்வளத்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.